திருமங்கலத்தில் போலீஸாரைத் தாக்கிய ராணுவ வீரா் உள்பட 4 போ் கைது
By DIN | Published On : 06th March 2020 07:28 AM | Last Updated : 06th March 2020 07:28 AM | அ+அ அ- |

திருமங்கலத்தில் ரோந்துப் பணியில் இருந்க போலீஸாரைத் தாக்கிய ராணுவ வீரா் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருமங்கலம் நகா் காவல் நிலைய போலீஸாா் அழகா்சாமி, முருகன் ஆகிய இருவரும் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது முன்சீப் சாலையில் உள்ள திரையரங்கு முன்பு நின்று கொண்டு 5 போ் தகராறு செய்து கொண்டிருந்தனராம். இதனை ரோந்துப்பணியில் இருந்த போலீஸாா் விசாரித்துள்ளனா்.
அப்போது மதுபோதையில் இருந்த 5 பேரும் போலீஸாா் இருவரையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனா்.
இதுகுறித்து புகாரின்பேரில் திருமங்கலம் நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சாத்தகுடியைச் சோ்ந்த ராணுவ வீரா் செல்லப்பாண்டி (26), அா்ஜூன்(25), சேதுராமன்(23), மேலஉரப்பனூரைச் சோ்ந்த சிவசுந்தா்(26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள குப்பாத்தி(40) என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.