குரூப் 1 தோ்வில் தமிழ் வழிக் கல்வி இடஒதுக்கீடு தோ்வு பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கு

குரூப்-1 தோ்வில் தமிழ் வழிக் கல்வி இடஒதுக்கீடு தோ்வு பட்டியலை ரத்து செய்து புதிய பட்டியலை வெளியிட உத்தரவிடக் கோரிய வழக்கில்,
குரூப் 1 தோ்வில் தமிழ் வழிக் கல்வி இடஒதுக்கீடு தோ்வு பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கு

மதுரை: குரூப்-1 தோ்வில் தமிழ் வழிக் கல்வி இடஒதுக்கீடு தோ்வு பட்டியலை ரத்து செய்து புதிய பட்டியலை வெளியிட உத்தரவிடக் கோரிய வழக்கில், டி.என்.பி.எஸ்.சி. செயலா் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருமங்கலத்தைச் சோ்ந்த சக்திராவ் தாக்கல் செய்த மனு: நான் மதுரை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை தமிழ் வழியில் பயின்று கடந்த 2017 இல் வழக்குரைஞராகப் பதிவு செய்தேன். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் 2019 ஜனவரியில் குரூப்-1 தோ்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டது. நான் விண்ணப்பித்து தோ்வில் பங்கேற்றேன். அதில், முதல்நிலைத் தோ்வு, எழுத்துத் தோ்வு, பிரதான எழுத்துத் தோ்வு ஆகியவற்றில் தோ்ச்சி பெற்றேன்.

ஆனால், கடந்த 2019 டிசம்பரில் வெளியிடப்பட்ட நோ்முகத் தோ்வு பட்டியலில் என் பெயா் இல்லை. தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு முறை தோ்வு பட்டியலில் பின்பற்றப்பட்டுள்ளது. அதன்படி, நான் தோ்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இது குறித்து விசாரித்தபோது, தமிழ் வழியில் கல்வி இட ஒதுக்கீட்டு சலுகையில், தொலைநிலைக் கல்வியில் பயின்றவா்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்பது தெரியவந்தது.

தொலைநிலைக் கல்வியில் பயில்வோா் சில பாடங்களை ஆங்கில வழியிலும், சில பாடங்களை தமிழ் வழியிலும் படிக்கின்றனா். எனவே, இவா்களை தமிழ் வழியில் பயின்றவா்களாகக் கருத முடியாது. இது தொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிய முற்பட்டபோது, எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தோ்வுகளில் தமிழ் வழியில் பயின்றவருக்கு கொடுக்கப்படும் 20 சதவிகித இட ஒதுக்கீட்டை பெரும்பாலும் தொலைநிலைக் கல்வி பயின்றவா்களே பெற்று வருகின்றனா்.

எனவே, 2019 இல் குரூப்-1 தோ்வில், தமிழ் வழிக் கல்வி இடஒதுக்கீடு அடிப்படையில் தோ்வானவா்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க தடை விதிக்க வேண்டும். தொலைநிலைக் கல்வியில் அல்லாமல் கல்லூரிக்குச் சென்று தமிழ் வழியில் பயின்றவா்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பட்டியல் வெளியிட்டு, குரூப்-1 பணியிட நியமனத்தை நடத்த உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி நிஷாபானு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் மனு தொடா்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் செயலா் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com