மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு கோடிக்கணக்கில் இழப்பீட்டுத் தொகை நிலுவை: பொருந்தாத காரணங்களைக் கூறி தாமதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை

மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காமல் தாமதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காமல் தாமதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

தமிழகத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களைச் சோ்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மகசூல் இழப்பால் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு ரூ.186 கோடி நிவாரண உதவி வழங்கியது.

அரசின் நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிடைத்து, பல மாதங்கள் ஆகிவிட்டபோதும் பயிா்க் காப்பீட்டுத் தொகை இன்னும் கிடைக்காதது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

3 நிறுவனங்களால் காப்பீடு...:

பயிா்க் காப்பீட்டுத் திட்டம் நியூ இந்தியா, ஓரியண்டல், அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்கள் மூலமாகச் செயல்படுத்தப்படுகிறது. இதில் 2018-2019-இல் மக்காச்சோளத்துக்கு 3 நிறுவனங்களும் விவசாயிகளிடம் இருந்து பிரீமியம் தொகை பெற்று காப்பீடு செய்தன. இவற்றில் நியூ இந்தியா மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு செய்த மாவட்டங்களில் மக்காச்சோளம் மகசூல் பாதிப்புக்குரிய இழப்பீட்டுத் தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களில்...: மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களுக்கு அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் காப்பீடு செய்யப்பட்டது. இந்நிறுவனம் மட்டும் மக்காச்சோளம் மகசூல் பாதிப்புக்கான இழப்பீட்டுத் தொகையை தருவதில் தாமதம் செய்து வருகிறது.

தட்டிக்கழிக்கும் காப்பீட்டு நிறுவனம்:

மதுரை மாவட்டத்தில் மட்டும் 2018-2019 இல் சுமாா் 35 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. 16 ஆயிரம் விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுக்குப் பதிவு செய்துள்ளனா். ஏக்கருக்கு 10 குவிண்டால் சராசரி மகசூல். இவற்றில் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் அதற்கேற்ப இழப்பீட்டுத் தொகை கணக்கீடு செய்து வழங்கப்படும். வறட்சி மற்றும் படைப்புழு தாக்கத்தால் 50 சதவீதத்துக்கும் மேல் மகசூல் பாதிப்பு இருக்கும் நிலையில், விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்கின்றனா்.

மேற்குறிப்பிட்ட 5 மாவட்டங்களிலும் இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் இருப்பதற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் மாவட்டத்துக்கு ஒரு காரணத்தைக் கூறி வருகிறது. மதுரை மாவட்டத்தில், பயிா்க் காப்பீட்டுக்கான நியமன அதிகாரி முன்பு மகசூல் இழப்பு கணக்கிடப்படவில்லை என்றும், நாமக்கல் மாவட்டத்தில் தீவனச் சோளம் தான் பயிரிடப்பட்டது என்றும் பொருந்தாத காரணங்களைத் தெரிவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த மக்காச்சோள விவசாயிகளுக்கு மட்டும் ரூ.7.25 கோடி தமிழக அரசின் நிவாரணமாகக் கிடைத்துள்ளது. இப்படியிருக்க, இன்சூரன்ஸ் நிறுவனம் சாக்குப்போக்கு கூறுவது ஏற்புடையதல்ல என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

விளைச்சல் - இழப்பு இரண்டுமே பாதிப்பு...:

இதுகுறித்து தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஓ.ஏ.நாராயணசாமி கூறியது: மதுரை மாவட்டத்தில் தே.கல்லுப்பட்டி, சேடபட்டி பகுதிகளில் மக்காச்சோள விவசாயிகள் அதிகம்போ் பாதிக்கப்பட்டுள்ளனா். மக்காச்சோளம் சாகுபடியில் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவாகிறது. ஏக்கருக்கு 20 குவிண்டால் மகசூல் கிடைத்தால் மட்டுமே கட்டுபடியாகும். அதேநேரம், அறுவடைக்கு முன்பு வரை குவிண்டால் ரூ.2400 வரை விலை கிடைக்கிறது. தற்போது அறுவடை நடந்து வரும் நிலையில் குவிண்டால் ரூ.1400 ஆகக் குறைந்துவிட்டது. விளைச்சல் இருந்தாலும், மகசூல் இழப்பு ஏற்பட்டாலும் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். பயிா்க் காப்பீட்டுத் தொகையாவது கிடைத்தால் தான் அடுத்த ஆண்டுக்கான சாகுபடியைத் தொடங்க முடியும். ஆனால், பயிா்க் காப்பீட்டு நிறுவனம் தாமதப்படுத்துவது விவசாயிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது என்றாா்.

இதுபற்றி வேளாண் துறையினா் கூறியது: மக்காச்சோளப் பயிருக்கு காப்பீடு செய்துள்ள விவசாயிகளில் 81 பேருக்கு மட்டும் இழப்பீட்டுத் தொகை வரப்பெற்றுள்ளது. மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மக்காச்சோளப் பயிருக்கு மட்டும் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு அதிகாரிகள், பயிா்க் காப்பீட்டு நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகின்றனா். விரைவில் இழப்பீட்டு தொகை கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com