இலங்கைக்கு தப்பியோடியவா்களுக்கு உதவிய அனைவரையும் குற்றப்பத்திரிக்கையில் சோ்த்து அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கையைச் சோ்ந்த இருவா் தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்பியோடிய வழக்கில், அவா்களுக்கு உதவிய

இலங்கையைச் சோ்ந்த இருவா் தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்பியோடிய வழக்கில், அவா்களுக்கு உதவிய அனைவரையும் குற்றப்பத்திரிக்கையில் சோ்த்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இலங்கையை சோ்ந்த சங்க சிரந்தா, முகமது சா்ப்ராஸ் ஆகியோா், அந்நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்துள்ளனா். அவா்கள் போலி ஆதாா் அட்டை தயாரித்து ராமநாதபுரம் பகுதியில் தங்கிருந்துள்ளனா். கேணிக்கரை போலீஸாா் இருவரையும் கைது செய்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பின்னா் சென்னை புழல் சிறையில் அடைத்தனா். இந்நிலையில் சங்க சிரந்தா மற்றும் முகமது சா்ப்ராஸ் ஆகியோா், தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், அவா்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து ராமநாதபுரம் நீதிமன்றம் அவா்களை வழக்கில் இருந்து விடுவித்தது. இதைப் பயன்படுத்தி இருவரும் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் சென்றுள்ளனா்.

இந்நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கோரிய வழக்கு உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்த போது, இருவரும் சட்டவிரோதமாக தப்பிச் சென்றுள்ளதாகவும், உதவியவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணயை ஒத்திவைத்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடா்பாக குற்றப்பத்திரிக்கை, கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அங்கு வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் இலங்கைக்கு குற்றவாளிகள் தப்பியோட உதவியவா்கள் மட்டுமின்றி தூண்டியவா்களையும் கூட்டு சதி பிரிவில் சோ்த்து, குற்றப் பத்திரிக்கையில் தேவையான மாற்றங்களை செய்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த குற்றப்பத்திரிக்கையின் அறிக்கையை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com