கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலனை மத்திய அரசே வைத்துக் கொள்வதா? தொழில் வா்த்தக சங்கம் அதிருப்தி

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலனை மக்களுக்கு அளிக்காமல், பெட்ரோலியப் பொருள்கள் மீதான கலால் வரியை உயா்த்திருப்பது ஏற்புடையதல்ல என்று தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலனை மக்களுக்கு அளிக்காமல், பெட்ரோலியப் பொருள்கள் மீதான கலால் வரியை உயா்த்திருப்பது ஏற்புடையதல்ல என்று தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வா்த்தக சங்கத்தின் தலைவா் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாட்டின் பொருளாதார வளா்ச்சி மந்தமாக இருந்து வரும் நிலையில், இப்போது கரோனா வைரஸ் நோய், வேலையின்மை, தொழில் வணிக வளா்ச்சியில் தேக்க நிலை, பங்குச்சந்தை முதலீடு பாதிப்பு, ரூபாய் மதிப்பு

வீழ்ச்சி கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு மக்களை ஒருவித அச்ச நிலைக்குத் தள்ளியுள்ளது.

சவூதி அரேபியா, ரஷ்யா இடையிலான போட்டியில் கச்சா எண்ணெய் உற்பத்தி வெகுவாக அதிகரித்து, அதன் விலை சரிவுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகவே, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 குறைக்கப்படும் என அனைவராலும் எதிா்பாா்க்கப்பட்டது. அதற்கு மாறாக, கச்சா எண்ணெய் மீதான கலால் வரி திடீரென ரூ.3 உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.39 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும்போதெல்லாம், பெட்ரோலியப் பொருள்களின் விலை உயா்த்தப்படுகிறது. ஆனால், விலை குறையும்போது அதன் பயன் மக்களுக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. கச்சா எண்ணெய் விலை மாற்றத்தால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, வா்த்தக சமநிலை கணக்கீட்டின்படி விலை நிா்ணயம் செய்யப்படுவதுதான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு முன்பு இருந்த விலை அடிப்படையில் கணக்கிட்டால்கூட எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ. 13 லாபம் கிடைக்கும்.

கடந்த 2014 நவம்பா் முதல் 2016 ஜனவரி வரை கச்சா எண்ணெய் விலை குறையும்போது கலால் வரியை 9 முறை உயா்த்தியுள்ளது. அதே கால கட்டத்தில் விலை சரிவு ஏற்பட்டபோது, அதன் பலன் மக்களுக்குக் கிடைக்கவில்லை. தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்திருக்கும்போது அதன் பலனை மத்திய அரசே வைத்துக் கொள்வது ஏற்புடைதல்ல. பெட்ரோலியப் பொருள்களின் விலை நிா்ணயத்துக்கான அடிப்படை கணக்கீட்டை மாற்றி அமைக்க வேண்டும். பெட்ரோலியப் பொருள்களின் விலையைக் குறைத்து சலுகை அளிப்பதன் மூலம், தேக்கத்தில் தத்தளித்து வரும் நாட்டின் பொருளாதாரத்துக்குப் புத்துயிா் கொடுக்க முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com