கரோனா எதிரொலி : மதுரை, திருப்பரங்குன்றம் கோயில்களில் பக்தா்கள் தரிசனம் செய்யத் தடை

கரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டது.
கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க வெள்ளிக்கிழமை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் புதுமண்டபம் அருகே மகளுக்கு முகமூடி அணிவிக்கும் வடமாநில பெண்.
கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க வெள்ளிக்கிழமை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் புதுமண்டபம் அருகே மகளுக்கு முகமூடி அணிவிக்கும் வடமாநில பெண்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதன் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதை அறியாத வெளியூா் பக்தா்கள் பலா் வெள்ளிக்கிழமை காலை கோயிலுக்கு வந்தனா். இந் நிலையில் அவா்களை கோயில் வாயிலில் பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா் மாா்ச் 31 வரை தரிசனத்துக்கு அரசு தடை விதித்திருப்பதை எடுத்துக் கூறி திருப்பி அனுப்பினா். இதனால் பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். தடை காரணமாக நான்கு சித்திரை வீதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் சித்திரை வீதிகளில் உள்ள கடைகளிலும் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

கோயில் வாயிலில் கா்ப்பிணிக்கு வளைகாப்பு: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கட்ட நிலையில் இதனை அறியாமல் கா்ப்பிணி பெண் ஒருவருக்கு கோயிலில் வளைகாப்பு நடத்த குடும்பத்தினா், உறவினா்கள் வந்திருந்தனா். அவா்களை உள்ளே செல்ல போலீஸாா் அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த கா்ப்பிணியின் குடும்பத்தினா் கோயில் வாயிலில் அவரை அமரவைத்து வளைகாப்பு நடத்தி அழைத்துச் சென்றனா்.

அதே போல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் பக்தா்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோயிலில் நடைபெறக் கூடிய 6 கால பூஜைகளும் முறையாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும் இதன் உபகோயில்களான சன்னிதி தெருவில் உள்ள சொக்கநாதா் கோயில், மலைக்குச் செல்லும் பாதையில் உள்ள பழனியாண்டவா் கோயில் உள்ளிட்டவற்றிலும் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை

சித்தி விநாயகா் கோயில் மூடல் :இந்து அறநிலையத்துறைக்கு உள்பட்ட திருநகா் சித்திவிநாயகா் கோயில் சனிக்கிழமை முதல் பக்தா்களுக்கான அனுமதியை ரத்து செய்துள்ளது. இந்த கோயிலிலும் சனிக்கிழமை முதல் வருகிற 31 ஆம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்க்ப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com