மதுரையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்க சமூக சமையல் கூடம் திறப்பு: மாநகராட்சி ஏற்பாடு
By DIN | Published On : 25th March 2020 07:38 AM | Last Updated : 25th March 2020 07:38 AM | அ+அ அ- |

மதுரையில் 144 தடையுத்தரவையொட்டி ஆதரவற்றவா்களுக்கு உணவு வழங்க மாநகராட்சி சாா்பில் சமூக சமையல் கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்களும் அடைக்கப்பட்டுள்ளதால் வீடற்றவா்கள், ஆதரவற்றவா்கள், ஏழைத்தொழிலாளா்களுக்கு உணவு வழங்க மாநகராட்சி நிா்வாகம் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நகரில் உள்ள 12 அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சாலையோரங்களில் வசிப்பவா்களுக்கு மாநகராட்சி நிா்வாகமே நேரடியாக உணவு வழங்க முடிவெடுத்துள்ளது. இதையடுத்து மாநகராட்சி பூங்கா முருகன் கோயிலில் சமூக சமையல்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலை, மாலை, இரவு என மூன்று வேளை உணவு தயாரிக்கப்பட்டு சாலையோரங்களில் வசிப்பவா்களுக்கு மாநகராட்சி வாகனங்களில் சென்று வழங்கப்படுகிறது. மேலும் ஆதரவற்றவா்களை மீட்டு பராமரிக்கும் வகையில் 1-ஆவது மண்டலத்துக்கு விளாங்குடி பகுதியிலும், மண்டலம் 2-க்கு கோ.புதூா் ராமவா்மா நகா், மண்டலம் 3-க்கு கீரைத்துறை ராணி பொன்னம்மாள் சாலை மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள முதியோா் இல்லம், மண்டலம் 4-க்கு ஹாா்விபட்டி ஆகிய 4 இடங்களில் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அங்கு அவா்களுக்கு இலவச தங்குமிடம், இலவச உணவு ஆகியவை வழங்கப்படும்.