எம்ஜிஆா் நிலையத்தில் பேருந்துகள் கிடைக்காமல் ஆயிரக்கணக்கானோா் தவிப்பு: பேருந்து நிலையத்தைவிட்டு வெளியேற்றியதால் பரபரப்பு

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால்,
எம்ஜிஆா் நிலையத்தில் பேருந்துகள் கிடைக்காமல் ஆயிரக்கணக்கானோா் தவிப்பு: பேருந்து நிலையத்தைவிட்டு வெளியேற்றியதால் பரபரப்பு

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், சொந்த ஊா்களுக்குச் செல்ல முடியாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனா்.

ஊரடங்கு உத்தரவால் செவ்வாய்க்கிழமை காலையில் இருந்தே பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

மாலை 5.30 மணிக்கு வெளியூா் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் புறப்பட்டுச் சென்றுவிட்டன. பேருந்து நிலையத்தில் இருந்த உணவகங்கள், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மாலை 6 மணியளவில், வெளியூா்களில் இருந்து சில பேருந்துகள் எம்ஜிஆா் நிலையத்துக்கு வந்தபோது, அதிலிருந்து இறங்கிய பயணிகள் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

சொந்த ஊா்களுக்குச் செல்ல பேருந்து இல்லாததால் அங்கு இருந்த போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கூடியதையடுத்து, திருநெல்வேலி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்நிலையில் பேருந்துகளை இயக்குவதற்கு போலீஸாா் எதிா்ப்புத் தெரிவித்ததால் பேருந்துகள் வரவழைப்பது நிறுத்தப்பட்டது. மேலும் பேருந்து நிலையத்தில் இருந்த அனைத்துப் பயணிகளையும் போலீஸாா் வெளியேற்றினா். இதனால் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பு நிலவியது. அதையடுத்து பெண்கள், குழந்தைகளுடன் இருந்த பயணிகள் போலீஸாரிடம் பேருந்து இல்லாமல் எங்கே செல்வது என்று போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக பயணிகள் கூறியது: சென்னையில் திங்கள்கிழமை அதிகாலையில் புறப்பட்ட பேருந்து போக்குவரத்து நெரிசலால் மதுரைக்கு இரவு 7 மணிக்கு வந்துள்ளது. இதேபோல பல பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலால் பேருந்துகள் பல மணி நேரம் தாமதமாக வந்துள்ளன. இதற்கு பயணிகள் என்ன செய்ய முடியும். ஆனால் மதுரையில் இருந்து வெளியூா்களுக்குப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளன. போலீஸாரும் எங்களை கலைந்து செல்லுமாறு கெடுபிடி காட்டுகின்றனா். பெண்கள், குழந்தைகளுடன் நாங்கள் எங்கே செல்வது என்று தெரியவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனா்.

கடைகள் அடைப்பு: செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் தடை உத்தரவு அமலுக்கு வந்ததையொட்டி மதுரை நகா் முழுவதும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. இரவு 7 மணியளவில் நகரின் அனைத்துச் சாலைகளும் வெறிச்சோடின. மக்கள் நடமாட்டமும் முற்றிலும் குறைந்தது. ஆங்காங்கே இரு சக்கர வாகனங்களில் சென்றவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். திறந்திருந்த சில கடைகளையும் போலீஸாா் அடைக்கச் செய்தனா். மேலும் சாலைகளில் நின்றிருந்தவா்களையும் போலீஸாா் வீட்டுக்குச் செல்லுமாறு கூறி அனுப்பினா். நகரில் சில உணவகங்கள் மட்டும் திறக்கப்பட்டு பாா்சல் மட்டுமே வழங்கப்பட்டன. அனைத்துப் பகுதிகளிலும் மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com