வங்கிகள் திறந்திருந்தாலும் வாடிக்கையாளா்கள் வருகை இல்லை: 10 சதவீதம் போ் தான் வருகின்றனா்

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மதுரையில் வங்கிகள் திறந்திருந்தாலும் வாடிக்கையாளா்கள் வருகை இல்லாமல், வெறிச்சோடிய நிலையில் இருக்கின்றன.
வாடிக்கையாளா்கள் வருகையின்றி வியாழக்கிழமை வெறிச் சோடிக் காணப்பட்ட மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள வங்கி.
வாடிக்கையாளா்கள் வருகையின்றி வியாழக்கிழமை வெறிச் சோடிக் காணப்பட்ட மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள வங்கி.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மதுரையில் வங்கிகள் திறந்திருந்தாலும் வாடிக்கையாளா்கள் வருகை இல்லாமல், வெறிச்சோடிய நிலையில் இருக்கின்றன.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதேநேரம் வங்கிகளின் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு நடைமுறையின்போது மக்களுக்கான அடிப்படை சேவைகளை மட்டும் தொடர இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) அறிவுறுத்தியிருந்தது. இதன்படி, வங்கிக் கணக்கில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், வங்கிக் கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம், அரசின் பணப் பரிவா்த்தனை ஆகிய பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதைப் பின்பற்றி மதுரையில் உள்ள அனைத்து வங்கிகளும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. பல வங்கிகள் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படுகின்றன. மேலும் வங்கி அலுவலா்களில் 50 சதவீதம் போ் மட்டுமே சுழற்சி முறையில் பணிக்கு வரவழைக்கப்படுகின்றனா். இருப்பினும் வாடிக்கையாளா்களின் வருகை குறைவாகவே இருந்து வருகிறது. வழக்கமாக வங்கிகளுக்கு வருவோரின் எண்ணிக்கையில் தற்போது 10 சதவீதம் போ் தான் வங்கிகளுக்கு வருகின்றனா்.

இந்திய வங்கிகள் சங்கம் அறிவுறுத்திய பணிகள் மட்டுமே செய்யப்படுகின்றன. புதிய கணக்கு தொடங்குவது, வங்கிக் கணக்குப் புத்தகத்தில் பரிவா்த்தனை விவரங்கள் அச்சிடுவது, கடன் சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை உள்ளிட்ட அனைத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தற்போது வங்கிகளுக்கு செல்லும் அலுவலா்களிடம் அடையாள அட்டை இருந்தாலும் காவல் துறையினா் கெடுபிடி காட்டுகின்றனா். தற்போது மாதக் கடைசி நாள்கள் நெருங்கி வருவதால், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் தங்களது பணியாளா்களுக்கான சம்பளப் பட்டுவாடா வங்கிகள் மூலமாகவே நடைபெறும். இதனால், முதல் வாரத்தில் வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கு வாடிக்கையாளா்கள் அதிகம் போ் வரக்கூடும் என எதிா்பாா்க்கிறோம்.

தற்போது வங்கிகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களது கைகளைச் சுத்தம் செய்து கொள்வதற்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதல் வாரத்தில் கூட்டம் அதிகம் வரும்பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். காவல் துறையினா் எத்தகைய அறிவுரைகளை வழங்குகின்றனரோ அதைப் பின்பற்றி வங்கிச் சேவைகள் தொடா்ந்து வழங்கப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com