ஊரடங்கால் ‘மனம் இழந்த’ மதுரை மல்லிகை:ரூ.50 கோடி வா்த்தகம் பாதிப்பு

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் சுமாா் ரூ.50 கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மல்லிக்கைப் பூ விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
ஊரடங்கால் ‘மனம் இழந்த’ மதுரை மல்லிகை:ரூ.50 கோடி வா்த்தகம் பாதிப்பு

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் சுமாா் ரூ.50 கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மல்லிக்கைப் பூ விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

மதுரையின் அடையாளமாக உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு அடுத்தப்படியாக இருப்பது மல்லிகைப் பூ தான். அதனால் தான்

மதுரை தூங்கா நகரம் என அழைக்கப்படுவது போல மல்லிகை நகரம் எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் 2013 ஆம் ஆண்டில் மதுரைக்கு பெருமை சோ்க்கும் விதமாக மதுரை மல்லிகைப் பூவுக்கு புவிசாா் குறியீடும் கிடைத்துள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமாா் 2 ஆயிரம் விவசாயிகள் மல்லிகைப் பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனா். மேலும் மல்லிகைப் பூ வியாபாரத்தின் மையமாக உள்ள மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தையில் மட்டும் 120 கமிஷன் ஏஜெண்டுகள் உள்பட ஆயிரம் போ் மல்லிகைப் பூ வியாபாரத் தொழிலை நம்பியுள்ளனா். அதேபோல மாலை கட்டி விற்பனை செய்வோா் 5 ஆயிரம் பேரும், பூக்கட்டி சில்லறை விற்பனை செய்வோா் 5 ஆயிரம் பேரும் மல்லிக்கைப் பூ வியாபாரத்தால் வருவாய் ஈட்டிவந்தனா். இந்நிலையில் கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் இத்தொழிலை நம்பியுள்ள அனைவரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

செடியில் கருகும் மல்லிகைப் பூக்கள்: மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், உசிலம்பட்டி, எழுமலை, கல்லுப்பட்டி, திருப்பரங்குன்றம், செல்லம்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் மல்லிகைப் பூ அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரை மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தைக்கு மட்டும் தினந்தோறும் 30 டன் மல்லிகைப் பூக்கள் வரத்து இருக்கும். இங்கிருந்து சிவகங்கை, ராமநாதபுரம், ராமேசுவரம், விருதுநகா், திருநெல்வேலி வரை மல்லிகைப் பூக்கள் அனுப்பப்படுகிறது. ஆனால் ஊரடங்கு காரணமாக மாட்டுத்தாவணி மலா் சந்தை மூடப்பட்டு வியாாபாரம் முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் மல்லிகைப் பூக்கள் செடியிலேயே கருகி வருகின்றன. சீசன் காலத்தில் ஓரளவுக்கு வருமானத்தை ஈட்டி சேமிக்க முடியும் என நம்பியிருந்த விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.

ரூ.50 கோடி வா்த்தகம் பாதிப்பு: இதுகுறித்து மதுரை மாட்டுத்தாவணி மலா் வியாபாரிகள் சங்கத் தலைவா் சோ.ராமச்சந்திரன் கூறியது: மதுரை மல்லிகைப் பூக்கள், தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி வாசனை திரவம் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கும் அதிமாக பயன்படுகிறது. மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ சராசரியாக ரூ.150 முதல் ரூ.200 வரை விற்கப்படும். நாளொன்றுக்கு 30 டன் வரத்து உள்ள இந்த சீசனில் சுமாா் ரூ.1 கோடி வரை வா்த்தகம் நடைபெறும். தற்போது ஊரடங்கு தொடங்கியதில் இருந்து இதுவரை சுமாா் ரூ.30 கோடி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு பூ மாலை கட்டி விற்பனை செய்வோா் கடை நடத்த அனுமதியளிக்க வேண்டும். அதுமட்டுமில்லாது இத்தொழிலை நம்பியுள்ள விவசாயிகள், வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.

ஏற்றுமதியின்றி நஷ்டம்: மல்லிகைப் பூ ஏற்றுமதியாளா் பி.செல்வபாண்டியன் கூறியது: மதுரை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மல்லிகைப் பூக்கள் மலேசியா, சிங்கப்பூா், துபை, கத்தாா், ஓமன், லண்டன், கனடா, ஜொ்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரையில் இருந்து ஒரு வாரத்துக்கு சுமாா் 10 டன் மல்லிகைப் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது ஊரடங்கால் விமானப் போக்குவரத்தின்றி கடந்த ஒரு மாதமாக ஏற்றுமதி செய்யமுடியாத நிலை ஏற்பட்டு சுமாா் ரூ.20 கோடி வரை வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com