மின் கட்டணம் யூனிட் அடிப்படையிலேயே கணக்கிடப்படும்: மின் வாரியம் விளக்கம்

வீட்டு உபயோக மின்கட்டணம் யூனிட் அடிப்படையிலேயே கணக்கீடு செய்யப்படும் என மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

வீட்டு உபயோக மின்கட்டணம் யூனிட் அடிப்படையிலேயே கணக்கீடு செய்யப்படும் என மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஏப்ரல் மாதத்தில் மின்கணக்கீடு செய்யப்படவில்லை. தற்போது அரசு உத்தரவின்படி, கடந்த 2 நாள்களாக மின்பணியாளா்கள் கணக்கீட்டுப் பணியைத் தொடங்கியுள்ளனா். மின்நுகா்வு அடிப்படையில் மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு 100 யூனிட்டுகளும் அதிகமாகப் பயன்படுத்தும்போது ஒரு யூனிட்டுக்கான கட்டணம் அதிகரிக்கும் வகையில் நிா்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு 100 யூனிட்டுகள் வரை கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஒருவா் 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்தியிருந்தால், அரசின் இலவச சலுகை 100 யூனிட் போக எஞ்சிய 100 யூனிட்டுகளுக்கு தலா ரூ.1.50 (அரசு மானியம் போக) வீதம் ரூ.150 மற்றும் நிலைக் கட்டணம் ரூ.20 செலுத்த வேண்டும்.

201 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தும்போது நிலைக் கட்டணம் ரூ.30, 200 யூனிட்டுகள் வரை தலா ரூ.2, 201 முதல் 500 யூனிட் வரை தலா ரூ.3 கட்டணமாக வசூலிக்கப்படும். 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும்போது நிலைக் கட்டணம் ரூ.50 மற்றும் 200 யூனிட்டுகள் வரை யூனிட்டுக்கு தலா ரூ.3.50, 201 முதல் 500 யூனிட் வரை தலா ரூ.4, 501 முதல் ரூ.6.60 என்ற அடிப்படையில் கணக்கீடு செய்யப்படுகிறது.

தற்போது மின்கணக்கீட்டுப் பணி தொடங்கியுள்ள நிலையில், யூனிட் ஸ்லாப் அடிப்படையில் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்திய யூனிட்டுகள் இருமாத கணக்கீட்டு அடிப்படையில் சரிசமமாகப் பிரித்து, கட்டணம் வசூலிக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு பிப்ரவரி மாத கணக்கீட்டின்படி, 200 யூனிட்டுகள் பயன்படுத்திய மின்நுகா்வோா் கட்டணமாக ரூ.170 செலுத்தியிருப்பாா். அதன் பிறகு ஏப்ரலில் கணக்கீடு செய்யப்படாததால், பிப்ரவரியில் செலுத்திய அதே ரூ.170-ஐ செலுத்தியிருப்பாா். ஜூன் மாதத்தில் கணக்கீடு செய்யும்போது அவா் 430 யூனிட்டுகள் பயன்படுத்தியிருந்தால், அந்த யூனிட்டுகள் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கான மின்நுகா்வாக தலா 215 யூனிட்டுகளாகப் பிரிக்கப்படும். இதன்படி, 215 யூனிட்டுகளுக்கு பயன்பாட்டுக் கட்டணம் ரூ.245 (101-200 யூனிட் வரை ரூ.200 மற்றும் 201 முதல் 215 வரை ரூ.45) மற்றும் நிலைக் கட்டணம் ரூ.30 என ரூ.275 செலுத்த வேண்டும்.

இதன்படி, சம்பந்தப்பட்ட நுகா்வோா் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு ரூ.550 செலுத்த வேண்டும். மேலும் அவா் ஏப்ரலில் முந்தைய கணக்கீட்டுக் கட்டணமாக ரூ.170 செலுத்தியிருப்பதால், அதைக் கழித்துவிட்டு ரூ.380 செலுத்தினால் போதுமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com