முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
‘நிவாரணம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவித் தொகைகளையும் அஞ்சலகங்களில் பெறலாம்’
By DIN | Published On : 11th May 2020 07:25 AM | Last Updated : 11th May 2020 07:25 AM | அ+அ அ- |

மத்திய-மாநில அரசு அளிக்கும் நிவாரணம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவித் தொகைகளைப் பெற மே 11 முதல் 15 வரை அனைத்து அஞ்சலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது என, மதுரை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஜெ.சா. ஜவஹர்ராஜ் தெரிவித்துள்ளாா்.
பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு உதவும் வகையில், மத்திய- மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும், பயனாளிகளின் வங்கி கணக்கில் பல்வேறு நிவாரணத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், போக்குவரத்து தடை காரணமாக பலரும் வங்கி மற்றும் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முடியாத நிலையில் உள்ளனா். மேலும், வங்கிகள், ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதனைத் தவிா்க்க, மக்கள் அஞ்சலகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின், ஏஇபிஎஸ் என்ற ‘ஆதாா் எனபில்ட் பேமென்ட் சிஸ்டம்’ வசதியைப் பயன்படுத்தி அஞ்சலகங்கள், தபால்காரா், கிராம அஞ்சல் ஊழியா்கள் மூலம் பணம் பெறலாம்.
இச்சேவையை மக்கள் பயன்படுத்தி கொள்வதற்காக மே 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மதுரையில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. அங்கு, ஏஇபிஎஸ் சேவை மூலம் ஆதாா் எண் இணைக்கப்பட்ட எந்தவொரு வங்கி கணக்கிலிருந்தும் கட்டணமின்றி பணம் பெற முடியும். மேலும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், முதியோா், கைம்பெண், மாற்றுத் திறனாளி ஆகியோருக்கான உதவித் தொகை, சமையல் எரிவாயு உருளை மானியம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நலத்திட்ட பயனாளிகளுக்கும் இச்சேவையைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.