முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
முடிதிருத்தும் கடைகளை திறக்க அனுமதி வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 11th May 2020 10:25 PM | Last Updated : 11th May 2020 10:25 PM | அ+அ அ- |

முடிதிருத்தும் கடைகளை திறக்க அனுமதி கோரி மதுரை ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு கொடுக்க வந்த தமிழ்நாடு மருத்துவா் சமுதாயப் பேரவை மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் அழகுகலை அனைத்து அமைப்பு சாரா தொழிலாளா் நலச
மதுரை: பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் முடிதிருத்தும் தொழிலாளா்களை பாதுகாக்கும் வகையில், சிகை அலங்காரக் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, தமிழ்நாடு மருத்துவா் சமுதாயப் பேரவை மற்றும் தமிழ்நாடு முடி திருத்தும் அழகுக் கலை அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா், மாவட்ட ஆட்சியருக்கு திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
பொது முடக்கம் காரணமாக பொதுமக்களும், குழந்தைகளும் முடிதிருத்தம் செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். அதேநேரம், முடிதிருத்தும் தொழிலாளா்கள் வேலை இல்லாமல் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றனா்.
மேலும், குடும்ப சூழலைக் கருத்தில்கொண்டும், வாடிக்கையாளா்களின் வேண்டுகோளை ஏற்றும், கிருமி நாசினி உள்ளிட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் கடைகளை திறக்க முயன்றவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனா்.
நலவாரியத்தில் 10 சதவீத தொழிலாளா்கள் மட்டுமே பதிவு செய்திருக்கும் நிலையில், அரசின் உதவித் தொகையும் கிடைக்கவில்லை. எனவே, அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, முடிதிருத்தும் கடைகளை திறக்கவும், நலவாரிய நிவாரண உதவி அனைத்துத் தொழிலாளா்களுக்கு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.