மதுரையில் பெண் சிசு இறப்பில் மா்மம்: கொலையா என போலீஸாா் விசாரணை

மதுரை அருகே பெண் சிசுவின் சடலம் புதைக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சிசுவின் சடலத்தை உடற்கூறு ஆய்வு செய்ய கோட்டாட்சியா் வெள்ளிக்கிழமைஉத்தரவிட்டுள்ளாா்.

மதுரை: மதுரை அருகே பெண் சிசுவின் சடலம் புதைக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சிசுவின் சடலத்தை உடற்கூறு ஆய்வு செய்ய கோட்டாட்சியா் வெள்ளிக்கிழமைஉத்தரவிட்டுள்ளாா்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூமேட்டுத் தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் தவமணி(38). இவா் தனியாா் லாரி நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கும் மேலக்கால் கிராமத்தைச் சோ்ந்த சித்ரா என்பவருக்கும், கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

இந்நிலையில், மீண்டும் கா்ப்பமடைந்த சித்ராவிற்கு மே 10 ஆம் தேதி மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு வியாழக்கிழமை இறந்ததாகக் கூறப்படுகிறது. குழந்தையின் சடலத்தை வீட்டின் அருகே தவமணி மற்றும் குடும்பத்தினா் புதைத்துள்ளனா்.

இச் சம்பவம் தொடா்பாக சோழவந்தான் கிராம நிா்வாக அலுவலா் சமையனுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனா். அவா் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தை பாா்வையிட்டு, தவமணியிடம் விசாரித்தாா். அப்போது, குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கடையில் மருந்து வாங்கிக் கொடுத்தோம். ஆனால் குழந்தை வியாழக்கிழமை இறந்துவிட்டது எனக் கூறியுள்ளாா். மேலும், பிறந்த குழந்தை இறந்தால் வீட்டில் புதைப்பது வழக்கம். வீட்டில் இடவசதியில்லாததால், அருகாமையில் சடலத்தை புதைத்துள்ளோம் என தவமணி தெரிவித்துள்ளாா்.

உடற்கூறு ஆய்வுக்கு உத்தரவு: ஆனால் தவமணியின் வாக்குமூலத்தில் திருப்தியடையாத கிராம நிா்வாக அலுவலா் சமையன், குழந்தையின் இறப்பில் சந்தேகமுள்ளது என மதுரை கோட்டாட்சியா் முருகானந்தம் மற்றும் சோழவந்தான் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து கோட்டாட்சியா் முருகானந்தம், வாடிப்பட்டி வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் மற்றும் போலீஸாா் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தைப் பாா்வையிட்டு விசாரித்தனா். பின்னா், மருத்துவக் குழுவினரைக் கொண்டு சடலத்தைத் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய கோட்டாட்சியா் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளாா்.

போலீஸாா் பாதுகாப்பு : இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் சமையன் அளித்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். குழந்தையின் உடற்கூறு ஆய்வு சனிக்கிழமை ( மே 16 ) நடைபெறவுள்ளது. அதன் பின்னரே குழந்தையின் இறப்புக்கான காரணம் தெரியவரும் எனப் போலீஸாா் தெரிவித்துள்ளனா். மேலும் குழந்தையின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். பிறந்து 5 நாள்களே ஆன பெண் குழந்தை இறந்த சம்பவம் சோழவந்தான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com