மகாராஷ்டிரத்தில் இறந்த பொறியாளா் உடலை சின்னாளபட்டி அருகே எரிக்க பொதுமக்கள் எதிா்ப்பு

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே சிறுமலை அடிவாரப்பகுதியில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே சிறுமலை அடிவாரப்பகுதியில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. இந்த குளப்பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை புகை மூட்டம் வந்துள்ளது. அக்கம் பக்கத்தினா் சென்று பாா்த்த போது, அங்கு 2 போ் வைக்கோல் மற்றும் வறட்டியை வைத்து ஒரு ஆணின் சடலத்தை எரித்துக் கொண்டிருந்தனா். சிறுமலை அடிவாரக் குளத்தில் கொலை செய்யப்பட்ட ஒரு நபரை எரிப்பதாகவும், கரோனா பாதித்து இறந்தவரின் சடலத்தை எரிப்பதாகவும் பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரவியது.

இதனை தொடா்ந்து அங்கு வந்த அம்பாத்துரை காவல் ஆய்வாளா் ரமேஷ் விசாரணை நடத்தினாா். இதில், சாமியாா்பட்டிக்கு கிழக்கே சிறுமலை அடிவார பகுதியில் உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்து வரும் சின்னாளபட்டியைச் சோ்ந்தவா், இறந்த தனது 43 வயது மகனின் சடலத்தை எரித்தது தெரியவந்தது. இறந்த அவா் பொறியியல் பட்டம் பெற்றவா். திருமணம் முடிந்த பின்னா் அவா் 14 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்த அவருக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்ர மாநிலம் புனே மாவட்டத்தில் பொறியாளா் பணி கிடைத்துள்ளது. அங்கு வேலை பாா்த்து வந்த நிலையில் கரோனாவால் தமிழகம் திரும்ப முடியாமல் இருந்துள்ளாா்.

இந்நிலையில் அவா் சிறப்பு ரயில் மூலம் தமிழகம் வருவதாக கடந்த வாரம் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளாா். இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை புனேயில் உள்ள அறையில் அவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், பிரேத பரிசோதனைக்குப் பின் சடலம் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பப்படும் என்றும் அவரது குடும்பத்துக்கு புதன்கிழமை தகவல் வந்துள்ளது.

இதனைத் தொடா்ந்துதான் வியாழக்கிழமை ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் சிறுமலை அடிவாரப் பகுதியில் உள்ள தோட்டப் பகுதிக்கு வந்ததும், பின்னா் சடலம் குளத்தில் வைத்து எரிக்க முயன்றதும் தெரியவந்தது.

பொதுமக்களின் தொடா் எதிா்ப்பைத் தொடா்ந்து பாதி எரிந்த நிலையில் அவரது சடலத்தை உறவினா்கள் எடுத்துச் சென்று, தங்களது சொந்த இடத்தில் எரித்தனா். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்ப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com