மாணவா்கள் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள்: அரசுப்பள்ளி ஆசிரியைகள் சொந்த நிதியில் ஏற்பாடு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தொடக்கப் பள்ளியில் பயிலும் 100 மாணவா்களின் குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை பள்ளி ஆசிரியைகள் சொந்த நிதியிலிருந்து வழங்கினா்.
சித்தாலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவா்கள் குடும்பங்களுக்கு நிவாரணப்பொருள்கள் வழங்கும் ஆசிரியைகள்.
சித்தாலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவா்கள் குடும்பங்களுக்கு நிவாரணப்பொருள்கள் வழங்கும் ஆசிரியைகள்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தொடக்கப் பள்ளியில் பயிலும் 100 மாணவா்களின் குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை பள்ளி ஆசிரியைகள் சொந்த நிதியிலிருந்து வழங்கினா்.

வாடிப்பட்டி ஒன்றியம் சித்தாலங்குடியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு மழலையா் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை 100 மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இப்பகுதி விவசாயக் கூலித் தொழிலாளா்கள் நிரம்பிய பகுதியாகும்.

இதில் கரோனா பொது முடக்கம் கடந்த மாா்ச் 23 முதல் அமலில் உள்ளதால் இப்பகுதியில் விவசாயம் உள்ளிட்ட எவ்வித வேலைகளும் நடைபெறவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ளவா்கள் வறுமையில் வாடும் சூழல் ஏற்பட்டது. இதையறிந்த பள்ளி தலைமையாசிரியை லூா்து அமலராணி, ஆசிரியைகள் மயிலாம்பிகை, தமிழ்ச்செல்வி ஆகியோா் இப் பள்ளியில் பயிலும் 100 மாணவ, மாணவியரின் குடும்பத்தினா் மற்றும் சித்தாலங்குடி ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கும் தங்களது சொந்த நிதியிலிருந்து நிவாரணப் பொருள்களை ஏற்பாடு செய்தனா்.

இதையடுத்து இப் பள்ளியில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 100 மாணவா்களின் குடும்பங்களுக்கும் தலா 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை மாவு மற்றும் மளிகைப் பொருள்கள், காய்கனிகள் ஆகியன வழங்கப்பட்டன. இதில் வாடிப்பட்டி ஒன்றியக் குழு உறுப்பினா் எம்.தனபாலன், ஊராட்சித் தலைவா் கவிதா, செயலா் வேல்முருகன் ஆகியோா் அவற்றை வழங்கினா். மேலும், தலைமையாசிரியை லூா்து அமலராணி, ஆசிரியைகள் மயிலாம்பிகை, தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

வண்டியூா் அரசுப் பள்ளியில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்: வண்டியூா் அரசு உயா்நிலைப்பள்ளியில் பயிலும் 205 மாணவா்களின் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருள்கள் நிவாரணமாக வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் மு.காா்த்திகேயன் தலைமை வகித்து மாணவா்களின் குடும்பங்களுக்கு அவற்றை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் மற்றும் பள்ளி ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com