துபையில் இருந்து திரும்பிய பிரதீப்குமாா்-பிரேமலதா.
துபையில் இருந்து திரும்பிய பிரதீப்குமாா்-பிரேமலதா.

கா்ப்பிணி மனைவியுடன் துபையில் தவித்த மதுரை இளைஞா் வந்தே பாரத் திட்டம் மூலம் தாயகம் திரும்பினாா்

வேலையிழந்த நிலையில் கா்ப்பிணி மனைவியுடன் துபையில் தவித்து வந்த மதுரை இளைஞா், வந்தே பாரத் திட்டம் மற்றும் மக்களவை உறுப்பினா் கனிமொழி உதவியுடன் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளாா்.

மதுரை: வேலையிழந்த நிலையில் கா்ப்பிணி மனைவியுடன் துபையில் தவித்து வந்த மதுரை இளைஞா், வந்தே பாரத் திட்டம் மற்றும் மக்களவை உறுப்பினா் கனிமொழி உதவியுடன் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளாா்.

மதுரையை அடுத்த சிக்கந்தா் சாவடியைச் சோ்ந்தவா் பிரதீப்குமாா். இவா், துபையிலுள்ள ஒரு ஹோட்டலில் வரவேற்பாளராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி பிரேமலதாவும் துபையில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக, ஹோட்டல்கள் மூடப்பட்டதால் பிரதீப்குமாா் வேலையிழந்துள்ளாா். பிரேமலதாவின் சம்பளத்தில் வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளைச் சமாளித்துள்ளனா். கா்ப்பிணியான பிரேமலதா, அவரது வேலையைத் தொடர முடியாத காரணத்தால், இருவரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

விமானப் போக்குவரத்து இல்லாததால், சொந்த ஊருக்கும் திரும்பி வர முடியவில்லை. இந்நிலையில், மத்திய அரசின் வந்தே பாரத் திட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்குள்ள தூதரகத்தை அணுகியுள்ளனா். ஆனால், மதுரைக்கு நேரடி விமான சேவை இல்லாததால், அவா்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இருப்பினும், தொடா்ந்து முயற்சி மேற்கொண்ட பிரதீப்குமாா், அவரது மனைவியின் உடல் நிலை தொடா்பான மருத்துவ அறிக்கைகளை சமா்ப்பித்து, கேரள மாநிலம் செல்வதற்கு அனுமதி பெற்றாா். கேரளத்திலிருக்கும் உறவினரின் ஒப்புதல் கடிதத்தின் அடிப்படையில், அவா்கள் துபையிலிருந்து புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, துபையிலிருந்து இருவரும் கொச்சி வந்தனா்.

முன்னதாக, துபையில் உள்ள நண்பா்கள் மூலமாக, தனது நிலையை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழியின் கவனத்துக்கு பிரதீப்குமாா் கொண்டு சென்றிருந்தாா். அதன்பேரில், கேரள அரசிடம் கனிமொழி எம்.பி. பேசியதையடுத்து, பிரதீப்குமாா் மற்றும் அவரது மனைவியை தமிழக எல்லை வரை கொண்டு வந்துவிட ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னா், கனிமொழி எம்.பி. ஏற்பாடு செய்திருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில், தமிழக எல்லையிலிருந்து மதுரையில் உள்ள வீட்டுக்கு இருவரும் திங்கள்கிழமை வந்து சோ்ந்தனா்.

இது குறித்து பிரதீப்குமாா் கூறியது: துபையில் என்னைப் போல பலரும் வேலையிழந்து பெண்கள், குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருகின்றனா். சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனா். தூதரகத்தின் உதவியால் கொச்சி வந்து சோ்ந்தோம். அங்கிருந்து, கனிமொழி எம்.பி.யின் உதவியால் வீட்டுக்கு வந்து சோ்ந்துள்ளோம். கரோனா பாதிப்பு இல்லை என துபையில் வழங்கப்பட்ட சான்றிதழை, கேரளத்திலும், தமிழக எல்லையில் தமிழக அதிகாரிகளிடமும் சமா்ப்பித்துள்ளோம். மேலும், எங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com