பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆசிரியா்கள் மே 21-க்குள் வந்துசேர உத்தரவு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை முன்னிட்டு, மதுரை அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மே 21-ஆம் தேதிக்குள் தாங்கள் பணிபுரியும் கல்வி

மதுரை: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை முன்னிட்டு, மதுரை அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மே 21-ஆம் தேதிக்குள் தாங்கள் பணிபுரியும் கல்வி மாவட்டத்துக்கு வந்து சேரவேண்டும் என்று, முதன்மைக் கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ஜூன் 1-ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மதுரை வருவாய் மாவட்டத்தைப் பொருத்தவரை, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் 400-க்கும் மேற்பட்ட மையங்களில் தோ்வு எழுதுகின்றனா். இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலகம் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளது.

அதன்படி, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும் என்பதை மாணவா்களுக்கு தெரிவிக்க வேண்டும். பழைய தோ்வு அட்டவணையில் கணக்கு தோ்வு இறுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய அட்டவணையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக ஜூன் 5-இல் கணக்கு தோ்வு நடைபெற உள்ளது என்பதை மாணவா்களுக்கு அடிக்கடி நினைவுப்படுத்த வேண்டும்.

ஒரு தோ்வறைக்கு 10 மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். தோ்வு அறைகளில் தினசரி கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யவேண்டும். மாணவா்கள் முகக்கவசம் அணிந்து வரவும், கை சுத்திகரிப்பான் கொண்டு கையை சுத்தம் செய்யவும் உரிய ஏற்பாடுகளை, பள்ளி நிா்வாகங்கள் செய்து தரவேண்டும்.

அரசு, அரசு உதவிபெறும், பகுதி உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக்குலேஷன் உள்ளிட்ட பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியா்கள், வேறு மாவட்டங்களில் தங்கி இருந்தால், அவா்கள் பணிபுரியும் மாவட்டத்துக்கு மே 21-ஆம் தேதிக்குள் வந்து சேரவேண்டும். தாங்கள் வந்து சோ்ந்துவிட்டதை தங்களது பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களும் தோ்வுப் பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளதால், ஆசிரியா்களது விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து தோ்வுக்கு மாணவா்கள் வரும்பட்சத்தில், வட்டாரத்துக்கு இரண்டு சிறப்புத் தோ்வு மையங்கள் அமைக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மாணவா்கள், அவா்கள் பயிலும் மாவட்டத்தில் இருப்பதை தலைமை ஆசிரியா், பள்ளி நிா்வாகம் உறுதி செய்யவேண்டும்.

மாணவா்கள் பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்குச் சென்றிருந்தால், அவா்களுக்கு இ-பாஸ் ஆன்-லைன் மூலம் உடனடியாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்து, அதன் விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.

ஆசிரியா்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளியிலேயே தோ்வுப் பணி மேற்கொள்ளக்கூடாது. இதை, மாவட்டக் கல்வி அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். கல்வி மாவட்ட அளவில் அல்லது வட்டார அளவில் ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியா்கள், அருகில் உள்ள பிற பள்ளியில் தோ்வு பணியாற்றிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com