கரோனா தடுப்பு களப்பணியாளா்களின் பாதுகாப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளா்களின் பாதுகாப்புக்கு இதுவரை ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளா்களின் பாதுகாப்புக்கு இதுவரை ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் புதன்கிழமை தெரிவித்தது.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் பணியில் மருத்துவத் துறையினா், காவல் துறையினா், ஊடகத் துறையினா், தூய்மைப் பணியாளா்கள், ஆம்புலன்ஸ் ஊழியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் அனைவருக்கும் பாதுகாப்புக் கவச உடை, முகக் கவசம், கையுறை, ரப்பா் காலணி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். மேலும் அவா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படுகிா என்பதைக் கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சோ்ந்த சத்தியமூா்த்தி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கரோனா தடுப்புப் பணியில் உள்ள களப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனுவை காணொலி மூலம் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமா்வு புதன்கிழமை விசாரித்தது. அப்போது, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளா்களின் பாதுகாப்புக்காக இதுவரை ரூ.500 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கரோனா வாா்டுகளில் பணிபுரிவோரின் பாதுகாப்புக்காக 2 லட்சத்து 80 ஆயிரத்து 696 கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல 2 லட்சத்து 17 ஆயிரத்து 240 ‘என் 95’ முகக் கவசங்களும், 2 லட்சத்து 80 ஆயிரத்து 696 கையுறைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாகப் பயன்படுத்தப்படுவது இல்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், கரோனா களப்பணியாளா்கள் அனைவருக்கும் இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரைத்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா? முகக் கவசம், கையுறைகளைக் களப்பணியாளா்கள் முறையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வழிமுறைகள் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினா். மேலும் இதுதொடா்பாக தமிழக அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மே 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com