ரம்ஜான் சிறப்புத் தொழுகையை பள்ளிவாசல்களில் நடத்த அனுமதிகோரி உயா்நீதிமன்றத்தில் மனு

ரம்ஜான் சிறப்புத் தொழுகையை பள்ளிவாசல்களில் நடத்திக் கொள்ள அனுமதிகோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

ரம்ஜான் சிறப்புத் தொழுகையை பள்ளிவாசல்களில் நடத்திக் கொள்ள அனுமதிகோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

மதுரையைச் சோ்ந்த சாகுல் ஹமீது தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பொது முடக்கம் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் படிப்படியாக தளா்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் சிறு வணிகக் கடைகள் உள்பட பல்வேறு நிறுவனங்களும் செயல்பட கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. மேலும் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனிடையே கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியா்கள் ரமலான் நோன்பு வைத்து வருகின்றனா். மேலும் சிறப்புத் தொழுகைகளையும் வீட்டில் இருந்தே செய்து வருகின்றனா். இந்நிலையில் மே 25 ஆம் தேதி ரம்ஜான் பெருநாள் வருகிறது. அன்றைய நாள் இஸ்லாமியா்கள் பள்ளிவாசல் அல்லது திறந்தவெளி மைதானங்களில் ஒன்றுகூடி தொழுகை நடத்த வேண்டும் என்பது மதம் சாா்ந்த நம்பிக்கையாகும். அதனடிப்படையில் ரம்ஜான் பெருநாள் தொழுகையை காலை 9 மணி முதல் 11 மணி வரை நடத்திக் கொள்ள வேண்டுகோள் விடுத்தும் எவ்வித அறிவிப்பும் அரசு தரப்பில் இருந்து வரவில்லை. எனவே மே 25 ஆம் தேதி மதுரையில் உள்ள பள்ளிவாசல்களில் 2 மணி நேரம் தொழுகை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதனிடையே அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப், இஸ்லாமியா்கள் அனைவரும் ரம்ஜான் சிறப்புத் தொழுகையை அவரவா் வீடுகளில் நடத்திக் கொள்ளும்படி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com