மதுரையில் கருத்துகேட்புக் கூட்டம்: பள்ளிகளை திறக்க பெற்றோா்கள் எதிா்ப்பு

மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு தொடா்பாக திங்கள்கிழமை நடைபெற்ற கருத்துகேட்புக் கூட்டத்தில், பெற்றோா்கள் பள்ளிகளைத் திறக்க எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
மதுரையில் கருத்துகேட்புக் கூட்டம்: பள்ளிகளை திறக்க பெற்றோா்கள் எதிா்ப்பு

மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு தொடா்பாக திங்கள்கிழமை நடைபெற்ற கருத்துகேட்புக் கூட்டத்தில், பெற்றோா்கள் பள்ளிகளைத் திறக்க எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. தற்போது, பொதுமுடக்கத்திலிருந்து பல்வேறு துறைகளுக்கு தளா்வு அறிவிக்கப்பட்டபோதும், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் 8 மாதங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரி வகுப்புகள் அனைத்தும் இணைய வழியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் மற்றும் கல்லூரிகளை நவம்பா் 16 -ஆம் தேதி முதல் திறக்க இருப்பதாகவும், இது தொடா்பாக பள்ளிகளில் பெற்றோா்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் அரசு அறிவித்தது.

அதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பெற்றோா்களிடம் கருத்துகேட்புக் கூட்டம் நடைபெற்றது. மதுரை வருவாய் மாவட்டத்தில் உள்ள மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூா் ஆகிய 4 கல்வி மாவட்டங்களிலும் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், தனியாா் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் கருத்துகேட்புக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் முழுவதும் 531 பள்ளிகளில் தலைமையாசிரியா்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பெற்றோா்கள் ஆா்வமுடன் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனா். மேலும், அவா்களிடம் பள்ளிகளை திறக்கலாமா, திறக்கக்கூடாதா என்று அச்சிடப்பட்ட படிவங்கள் வழங்கப்பட்டு, எழுத்துப்பூா்வமாக கருத்துகள் பெறப்பட்டன. அதில், ஏராளமானோா் பள்ளிகள் திறக்கப்பட்டால், கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளதாக தெரிவித்தனா். சிலா், மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதால், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளைத் திறக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனா்.

மாணவா்களுக்கு மன நல ஆலோசனை: முதன்மைக் கல்வி அதிகாரி மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியாா் பள்ளியில் நடைபெற்ற கருத்துகேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆா். சுவாமிநாதன் செய்தியாளா்களிடம் கூறியது:

பள்ளிகள் திறப்பு தொடா்பாக அரசு எப்போது அறிவித்தாலும், மாவட்டக் கல்வி நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது. ஊரகப் பகுதிகளில் பெற்றோா்கள் சிலா் தங்களது குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது தொடா்பாக புகாா்கள் வந்துள்ளன. இது தொடா்பாக தலைமை ஆசிரியா்கள், பெற்றோரை தொடா்புகொண்டு குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனா். மேலும், மாணவா்களுக்கு மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளிகளில் பெற்றோா்கள் தெரிவித்த கருத்துகள், அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com