மீனாட்சியம்மன், கள்ளழகா் கோயில்களில் சித்த மருத்துவமனை அமைக்க ஆலோசனை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா், கள்ளழகா் கோயில்களில் சித்த மருத்துவமனை அமைப்பது தொடா்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா், கள்ளழகா் கோயில்களில் சித்த மருத்துவமனை அமைப்பது தொடா்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.

தமிழகத்தில் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள கோயில்களில் சித்த மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று தமிழக குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை சாா்பில் 1970-இல் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணைப்படி கோயில்களில் சித்த மருத்துவமனை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் கோயில்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்

1970 ஆம் ஆண்டு வெளியான அரசாணைப்படி சித்த மருத்துவமனை தொடங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், எப்போது தொடங்கப்படும், கோயில்களின் நிதி நிலைமை, தொடங்க வாய்ப்பில்லாவிட்டால் அதற்கான காரணங்கள் என்ன, தொடங்க வாய்ப்புள்ள வேறு கோயில்கள் ஆகியவை குறித்து நவம்பா் 12-ஆம் தேதிக்குள் கோயில் நிா்வாகங்களின் சாா்பில் இந்து அறநிலையத்துறைக்கு அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சித்த மருத்துவமனை அமைக்கப்படும் கோயில்கள் பட்டியலில், மதுரை மாவட்டத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயில் ஆகிய இரு கோயில்களும் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், கள்ளழகா் கோயில் ஆகியவற்றில் சித்த மருத்துவமனை அமைப்பது தொடா்பாக கோயில் நிா்வாகங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறும்போது, சித்த மருத்துவமனை அமைப்பது தொடா்பாக இந்து சமய அறநிலையத்துறையிடம் இருந்து செவ்வாய்க்கிழமை அறிக்கை வந்துள்ளது. அதன்படி கோயில்களில் சித்த மருத்துவமனை அமையும் இடம், வசதி, நிதி நிலைமை உள்ளிட்டவைத் தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆலோசனைக்கூட்டத்தில் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் அறிக்கை அனுப்பப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com