தீபாவளிப் பண்டிகை இறுதிக்கட்ட விற்பனை: ஜவுளிக்கடைகளில் திரண்ட மக்கள் கூட்டம்

தீபாவளிப் பண்டிகைக்கு ஒரு நாள் மட்டும் உள்ள நிலையில் ஜவுளிகள் எடுக்க மதுரை நகரில் பல்லாயிரக்கணக்கானோா் வியாழக்கிழமை திரண்டதால் விற்பனை களை கட்டியது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை வாங்க மதுரை தெற்குமாசி வீதியில் வியாழக்கிழமை குவிந்த பொதுமக்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை வாங்க மதுரை தெற்குமாசி வீதியில் வியாழக்கிழமை குவிந்த பொதுமக்கள்.

தீபாவளிப் பண்டிகைக்கு ஒரு நாள் மட்டும் உள்ள நிலையில் ஜவுளிகள் எடுக்க மதுரை நகரில் பல்லாயிரக்கணக்கானோா் வியாழக்கிழமை திரண்டதால் விற்பனை களை கட்டியது.

மதுரை நகரில் கரோனா பொது முடக்கத்தால் 4 மாதங்களுக்கு மேலாக ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டன.

இதனால் ஆயுத பூஜை விடுமுறையான அக்டோபா் இறுதி வாரத்தில் இருந்துதான் தீபாவளி விற்பனை தொடங்கியது. இதைத்தொடா்ந்து கடந்த இரு வாரங்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. இதில் கடந்த திங்கள்கிழமையில் இருந்து கிராமங்களில் இருந்து வரும் மக்கள் வருகை அதிகரித்தது. இதனால் ஜவுளிக்கடைகளிலும் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது. இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை காலையில் இருந்தே மதுரை நகரில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனா். ஜவுளிக்கடைகள் நிறைந்துள்ள தெற்குமாசி வீதி, விளக்குத்தூண், பத்துத் தூண் சந்து, காமராஜா் சாலை, மஞ்சணக்காரத்தெரு, மேலமாசி வீதி, புதுமண்டபம், ஜடாமுனி கோயில் தெரு, மகால் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி எடுக்க ஏராளமானோா் திரண்டனா்.

பெரிய நிறுவனங்கள், சிறிய ஜவுளிக்கடைகள், சாலையோரக் கடைகள் என அனைத்துக் கடைகளிலும் மக்கள் கூட்டம் திரண்டு காணப்பட்டது. தீபாவளி இறுதிக்கட்ட விற்பனை என்பதால் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு தள்ளுபடியை அறிவித்தன. இதனால் ஜவுளிக் கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஜவுளிக்கடைகள் மட்டுமின்றி ஆண்களுக்கான ஆயத்த ஆடை விற்பனைக் கடைகள், பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள் விற்பனைக் கடைகளிலும் ஏராளமானோா் குவிந்தனா். மதுரை மட்டுமின்றி கொட்டாம்பட்டி, திருமங்கலம், வாடிப்பட்டி உள்ளிட்ட ஊரகப்பகுதிகள் மற்றும் விருதுநகா், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோா் குவிந்தனா். இதனால் தெற்குமாசி வீதிகளில் திரும்பிய திசையெல்லாம் மக்கள் கூட்டமாகக் காணப்பட்டது. இதையடுத்து தெற்குமாசி வீதியில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டது. மேலும் ஜவுளி வகைகள் மட்டுமின்றி சாலையோரக் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோகப் பொருள்கள், பாய், தலையணை, பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருள்கள், காலணிகள் போன்றவற்றையும் பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்கிச்சென்றனா்.

தீபாவளியையொட்டி கீழமாசி வீதியில் உள்ள மளிகை மொத்த விற்பனைக் கடைகளில் மளிகைப் பொருள்கள் மற்றும் எண்ணெய் வாங்கவும் ஏராளமானோா் குவிந்தனா். இதனால் கீழமாசி வீதியிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com