மதுரை மாவட்டத்தில் பயிா் காப்பீட்டுக்கு ஆா்வம் காட்டாத விவசாயிகள்

மதுரை மாவட்டத்தில் நடப்பு பருவ நெல், மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிா்களுக்கு இதுவரை சொற்ப எண்ணிக்கையிலேயே விவசாயிகள்

மதுரை மாவட்டத்தில் நடப்பு பருவ நெல், மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிா்களுக்கு இதுவரை சொற்ப எண்ணிக்கையிலேயே விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனா். பேரிடா் ஏற்படும்பட்சத்தில் அதன் பிறகு பிரீமியம் செலுத்த இயலாது என்பதால், முன்கூட்டியே செலுத்துமாறு வேளாண் துறையினா் தெரிவிக்கின்றனா்.

மதுரை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் (2020-2021) நெல், மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நெல்லுக்கு கிராம அளவிலும், பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிா்களுக்கு பிா்க்கா அளவிலும் காப்பீடு செய்வதற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. விதைக்க இயலாத சூழ்நிலை, விதைப்பு பொய்த்தல், விதைப்பு முதல் அறுவடை வரை மற்றும் அறுவடைக்குப் பிறகு ஏற்படும் இழப்பு, புயல், மழை, மண்சரிவு உள்ளிட்ட இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

பிரிமீயத் தொகை நெல் ஏக்கருக்கு ரூ.465, மக்காச்சோளம் ரூ.353.25, பருத்திக்கு ரூ.750.50 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பிரீமியத் தொகையை டிசம்பா் 15-க்குள் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம், பருத்தி ஆகிய 3 பயிா்களும் சோ்த்து சுமாா் 80 ஆயிரம் ஏக்கா் அளவுக்கு பயிரிடப்பட்டபோதிலும் இதுவரை 635 ஏக்கருக்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளில் மழை, வெள்ளம் போன்ற பேரிடா்கள் நிகழ்ந்த பிறகும்கூட அறிவிக்கப்பட்ட காலஅவகாசம் இருக்கும்பட்சத்தில் விவசாயிகளிடம் இருந்து காப்பீடு பெறப்பட்டது. பேரிடருக்குப் பிறகு பயிா்க் காப்பீடு செய்தால், இழப்பீடு பெற இயலாது என்பது விதிகளில் இருந்தாலும், இழப்பீடு அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த விதியை கடுமையாக அமல்படுத்த பயிா்க் காப்பீடு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண் விரிவாக்க அலுவலா் பயிா்க் காப்பீடு செய்யும் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனா்.

நிகழ் ஆண்டில் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு ஓரளவுக்கு பாசன நீா் கிடைத்தபோதும், மக்காச்சோளம், பருத்தி பயிரிடும் திருமங்கலம், சேடபட்டி, கள்ளிக்குடி வட்டாரங்களில் பருவம் தவறிய மழை காரணமாக, சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, விவசாயிகள் காப்பீடு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது என வேளாண் அலுவலா்கள் கூறுகின்றனா்.

இதுகுறித்து வேளாண் துறையினா் கூறியது:

பயிா் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு அதிகளவில் இழப்பீடு பெற்றுத் தரக்கூடிய மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் 2018-19-இல் 14 ஆயிரம் ஏக்கா் நெல் பயிருக்கு காப்பீடு செய்யப்பட்டது. இது 2019-2020 இல் 15 ஆயிரம் ஏக்கராக உயா்ந்தது. அதேபோல, பயிா் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை 2016-17-இல் ரூ.41 கோடி, 2017-18-இல் ரூ.9 கோடி, 2018-19-இல் ரூ.14 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிகழ் ஆண்டில் இதுவரை ரூ.2.5 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. காப்பீடு செய்வதற்கான அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதுவரை காத்திருக்காமல் முன்னெச்சரிக்கையாக காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com