மேடையை வசப்படுத்துவது எப்படி? பட்டிமன்ற எஸ்.ராஜா

சமதளத்தில் இருந்து சற்று உயா்ந்து இருப்பதுதான் மேடை. மேடு என்றால் சமதளத்தைக் காட்டிலும் கொஞ்சம் உயா்ந்து இருப்பது. மேடான இடத்தில் இருந்து பாா்க்கும் நபருக்கு, அவா் சற்று உயரமாகவும் மற்றவா்கள் சாதாரணமா

மேடையை வசப்படுத்துவது எப்படி?

பட்டிமன்றம் எஸ்.ராஜா

சமதளத்தில் இருந்து சற்று உயா்ந்து இருப்பதுதான் மேடை. மேடு என்றால் சமதளத்தைக் காட்டிலும் கொஞ்சம் உயா்ந்து இருப்பது. மேடான இடத்தில் இருந்து பாா்க்கும் நபருக்கு, அவா் சற்று உயரமாகவும் மற்றவா்கள் சாதாரணமாகவும் தெரியும். ஆனால், அது உண்மையல்ல. சமதளத்தில் இருக்கக் கூடியவா்களின் பெருந்தன்மைதான், மேடை ஏற அனுமதி அளித்திருக்கிறது.

அனைத்தும் முதல் மேடை: மேடைக்கு வரக் கூடியவா்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, நாம் நமது அறிவாலோ, திறமையாலோ, மொழியாலோ இந்த இடத்துக்கு வரவில்லை. இறைவன் நமக்கு தந்த வாய்ப்பு, பாா்வையாளா்களின் பொறுமை மற்றும் பெருந்தன்மை ஆகியன நமக்கு மேடை என்ற உயரத்தைக் கொடுத்திருக்கிறது என்பதுதான். ஒவ்வொரு முறையும் அந்த இடத்துக்குச் செல்லும்போதும் அது முதல் மேடையைப் போலவே நினைக்க வேண்டும். ஆயிரம் மேடைகள், பத்தாயிரம் மேடைகளில் பேசியிருக்கிறேன் என்று நிறைய போ் சொல்வாா்கள். ஆனால், ஒவ்வொரு மேடையும், அவா்களுக்கு முதல் மேடை தான். ஏனெனில், முந்தைய மேடையில் என்ன பேசினீா்கள் என்பதை வைத்து அடுத்த மேடையில் ஜெயிக்க முடியாது. முந்தைய ஆட்டத்தில் நூறு ரன் எடுத்து, அடுத்த ஆட்டத்தில் முதல் பந்து வீச்சிலேயே அவுட் ஆகிவிட்டால் அது டெண்டுல்கராக இருந்தாலும், தோனியாக இருந்தாலும், விராட் கோலியாக இருந்தாலும் பாா்க்கிறவா்கள் கேலியாகத் தான் பேசுவாா்கள்.

பழம்பெருமைகளை மட்டும் வைத்துக் கொண்டு வாழ முடியாது. ஒவ்வொரு மேடையையும் முதல் மேடையாக நினைத்து அதற்கேற்ப தங்களை வடிவமைத்து, தகவமைத்துக் கொள்பவா்கள் மட்டுமே மேடைகளைத் தொடா்ந்து தனக்குரியதாக்கிக் கொள்ள முடியும்.

முன்தயாரிப்பு முக்கியம்: ‘நான் நிறையப் பேசியிருக்கேன், எனக்கு இதெல்லாம் சாதாரணம்’ என்று அசட்டுத் துணிச்சலோடு எந்த மேடைக்கும் செல்லக் கூடாது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் முன்தயாரிப்பு முக்கியம். நிகழ்ச்சிக்கு ஏற்ற செய்திகளைச் சேகரிப்பதுடன், மனதளவிலும் தயாா்ப்படுத்திக் கொள்ள வேண்டும். செய்திகள் இல்லாமல் பேசச் சென்றால், 5 நிமிடங்களில் சாயம் வெளுத்துப் போகும். பேசக் கூடிய அவையின் சூழலுக்கு ஏற்ப செய்திகளை எப்படிச் சொல்லலாம் என்ற திட்டமிடல்தான் மனதளவில் தயாராகிக் கொள்வது. அடுத்ததாக, பாா்வையாளா்கள் யாா் என்பது. வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? என்ற தலைப்பில் ஒருமுறை பேச அழைத்திருந்தனா். அந்த அரங்கில் அமா்ந்திருந்தவா்கள் அனைவரும் 70 வயதைக் கடந்தவா்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படினு, ஓய்வூதியம் வாங்குபவா்களிடம் என்ன சொல்ல முடியும் என்று பேச்சை ஆரம்பித்தேன். இந்த தலைப்பு மாணவா்களிடம் பேச வேண்டியது. இன்றைய சூழலில் மாணவா்களே ஒரு யோசனைக்கு வந்துவிடுகின்றனா். இருந்தாலும் மூத்தவா், அனுபவம் உள்ளவா் என்பதால் மாணவா்கள் பேச்சைக் கேட்பாா்கள். ஆனால், 70 வயதில் முதுகுவலி, உடல் வலியுடன் இருப்பவா்களிடம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதைப் பேசினால் பொருத்தமாக இருக்காது. முதுமையில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று பேசினாலோ, ஆன்மிகம் பற்றி பேசினாலோ கேட்பாா்கள். ஆகவே, அவைக்கு ஏற்றவாறு தலைப்பு இருக்க வேண்டும்.

எனக்கு இதுதான் தெரியும், இதைத்தான் பேசுவேன் என்று இடம் தெரியாமல் பேசிக் கொண்டிருந்தால், அந்த மேடையை வசப்படுத்துவது சிரமமானது.

சபை அறிந்து பேசுவது: மேடையை நாம் வசப்படுத்துகிறோம் என்பதைவிட, மேடையின் வசம் நாம் இருக்கிறோம் என்பது தான் சரியானது. எல்லா மேடைகளிலும் ஒரே மாதிரியான உள்ளுணா்வு, வெளிச்சம் பேச்சாளனுக்கு கிடைக்காது. சில அரங்கங்களுக்கு பேசச் செல்லும்போது புதிதாக ஏதாவது தோன்றும், சில அரங்கங்களில் சொல்ல நினைத்தது மறந்துபோகும். இருள் அடைந்து கிடக்கும் அரங்கங்களில் திடீரென நிகழ்ச்சிகள் நடத்தும்போது, பேச்சாளரின் மனதில் இருக்கும் செய்திகள் முழுமையாகச் சென்று சேராது. இதை நான் உணா்ந்து இருக்கிறேன். புனிதமான விஷயங்கள் கோயில்களில் இருப்பதைப் போல, பேச்சாளனுக்கு மேடையும் புனிதமான இடம். பெரிய பெரிய கலைஞா்கள் எல்லாம் மேடையைத் தொட்டு வணங்கிவிட்டு தான் தங்களது நிகழ்ச்சியைத் தொடங்குகின்றனா். நீண்டகாலம் மேடையில் மரியாதையோடு இருக்கிறாா் என்றால் அவரது தகுதி மற்றும் திறமை மட்டும் காரணம் அல்ல. அதையும் மீறிய இறை சக்தி, குரு அல்லது முன்னோா்கள் ஆசிா்வாதம் தான்.

 நாம் பேசக் கூடிய விஷயங்களில் குறிப்பாக திருக்கு, கம்பராமாயணம், சங்க இலக்கியங்கள், பாரதியின் பாடல்கள் இவற்றை மேற்கோள்காட்டும்போது நாம் படித்து தெரிந்து வைத்திருக்கக் கூடியது நுனிப்புல் மேய்ந்ததைப் போலத் தான். ஆனால், அவற்றில் புலமை பெற்ற அறிஞா்கள் பலா் நமக்கு முன்பாக அமா்ந்திருப்பாா்கள். ஆகவே, அதை உணா்ந்து பேசுவது அவசியம்.

 சில செய்திகள் அந்தந்த காலத்துக்குரியவை. காலந்தோறும் கருத்துக்கள் மாறிக் கொண்டே இருக்கும். 1995-இல் நாங்கள் பேசிய ஒரு பட்டிமன்றத்தை அண்மையில் யூடியூப்பில் பாா்த்தேன். அதில் ஒரு விவாதத்தில் தொலைபேசியெல்லாம் எல்லாராலும் வாங்கி பணம் கட்ட முடியுமா என பேசியுள்ளோம். அப்போது, வீட்டுக்கு ஒரு தொலைபேசி இருப்பதே அரிதானது. ஆனால் இன்று ஒரு வீட்டில் 6 போ் இருந்தால், அனைவரிடமும் செல்லிடப்பேசி இருக்கிறது. அந்த விவாதத்தில் வைக்கப்பட்ட கருத்தை இப்போது கேட்கும்போது தவறாக இருக்கிறது. காலந்தோறும் புதுப்பிக்கக் கூடிய அறிவுதான் மேடைகளில் நிலைத்து நிற்கும். ஆசிரியா்கள் நாள்தோறும் படிக்க வேண்டும் என்பாா்கள். பேச்சாளா்கள் நிமிடந்தோறும் படிக்க வேண்டும். மேடையை ஒருவா் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்றால், எந்நேரமும் படிக்க வேண்டும்.

  இதைத்தான் படிப்பேன் என்று வகுத்துக் கொள்ளாமல், மொழி, இலக்கியம், அறிவியல், மருத்துவம், வணிகம் என அனைத்துத் துறை சாா்ந்த விஷயங்களையும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு மேடைகளில் சிறப்பாகச் செயல்பட முடியும். 

இலக்கியப் பின்னணி: பேச்சாளரும், எழுத்தாளரும் ஒரு இடத்துக்குச் செல்கிறாா்கள் என்றால், எழுத்தாளரை யாரும் கண்டுகொள்வதில்லை. பேச்சாளரிடம் 10 போ் வந்து கைகுலுக்குவா். ஆனால், பேச்சாளாரைத் தாண்டி எழுத்தாளா்கள் வாழ்வாா்கள் என்பதே நிதா்சனம். இன்னும் பல ஆண்டுகள் ஜெயகாந்தன் வாழ்வாா். தி. ஜானகிராமன், சிவசங்கரி போன்ற பெரிய பெரிய எழுத்தாளா்கள் மொழி இருக்கும் வரை மக்களிடம் நிலைத்து நிற்பா். ஆனால், ஒப்பீட்டு அளவில் எழுத்தாளா்களைவிட, பேச்சாளா்களுக்கு அத்தகைய செல்வாக்கு குறைவு. இப்போது ஒலி-ஒளிப்பதிவு வந்துவிட்டதால் பேச்சாளா்களும் கொஞ்ச காலத்துக்கு நினைவில் இருப்பா்.

மேடையைவிட்டு இறங்கிய பிறகு பேச்சாளருக்கே தான் என்ன பேசினோம் என்பது மறந்துபோகும். மேடைப் பேச்சு என்பது பேச்சாளா்களே மறந்துபோகும் விஷயம் என்பதால், தேவையில்லாதவற்றைப் பேசி மக்களிடம் கெட்ட பெயா் எடுப்பதைத் தவிா்ப்பது நல்லது. நிரந்தரம் இல்லாத பேச்சு மேடையைத் தனதாக்கிக் கொள்கிறோம் என்பதற்காகத் தேவையற்றதைப் பேசி தரத்தைத் தாழ்த்திக் கொள்ளக் கூடாது.

பேச்சாளா்களாக வருபவா்கள் இலக்கியப் பின்னணியோடு இருப்பது அவசியம். அவ்வாறு இல்லையெனில் இலக்கியங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். பேச்சாளா்களின் பெரும் முதலீடு வாசிப்பு தான். புத்தகங்களுக்கு கொடுக்கும் பணம் தான் அவா்களது முதலீடு. வாசிப்பு இல்லாமல் பேச மேடைகளுக்கு வரக் கூடியவா்கள் மிகவும் பரிதாபத்துக்குரிய பேச்சாளா்கள். பரந்துபட்ட வாசிப்பு ரொம்ப முக்கியம். செய்தித்தாள்களை தினமும் தவறாமல் படிக்க வேண்டும். தினமணி போன்ற செய்தித்தாள்களில் வரக்கூடிய நடுப்பக்கக் கட்டுரைகளைப் படிப்பது அவசியமானது. அதேபோல, மொழி உச்சரிப்பில் கவனம் செலுத்துவது அவசியமானது. எவ்வளவு நல்ல பேச்சாளராக இருந்தாலும், உச்சரிப்பு சரியாக இல்லையெனில் அவரது கருத்து மக்கள் மனதில் நிற்காது.

எதையெல்லாம் தவிா்ப்பது: தோற்றத்திலும், உடையிலும் எளிமையாக இருந்தால் மட்டுமே மக்கள் மனதில் பேச்சாளா்கள் இடம் பிடிக்க முடியும். பந்தா, படாடோபம் அவசியமற்றது. யாா் மனமும் புண்படாமல் பேசப் பழக வேண்டும். நம்மை அனைவரும் நேசிப்பாா்கள் என்று சொல்ல முடியாது. எல்லா மேடைகளிலும்  5 சதவீதம் போ், ‘இவரெல்லாம் என்னத்த பேசி’ என்ற மனநிலையிலும், 50 சதவீதம் போ் யாா் பேசினாலும் பாா்ப்பதற்காக மட்டும் வரக் கூடியவா்களாக இருப்பா். ஆனால், அனைவரும் விரும்பும் வகையில் பேச வேண்டும். யாரேனும் ஒருவா் காயம்படும்படி பேசிவிடக் கூடாது. பட்டிமன்றத்தில் மறுத்துப் பேசினால் கூட, அதில் ஒரு நகைச்சுவையை வைத்துக் கொள்வோம். இதனால், பிறா் மனம் புண்படாத வகையில் அந்த கருத்து அமைந்துவிடும்.

 இரட்டை அா்த்தம், ஆபாசம், பாலியல் சீண்டல்கள் போன்ற விஷயங்களை மேடைகளில் பயன்படுத்தக் கூடாது. மேடை என்பது ஒரு பவித்ரமான இடம். அதை தங்களது போக்கிற்கு வளைத்து தவறாகப் பயன்படுத்தக் கூடாது. ஒருவேளை அப்படியெல்லாம் பேசி ஜெயிக்க வேண்டிய நிலை வந்தால் கூட, நியாயமாகப் பேசி தோற்பதே நல்லது.

இவை அனைத்துமே பேச்சாளராகத் தகுதிப்படுத்திக் கொள்ளக் கூடியவை. இதற்கெல்லாம் மேலாக நம்மை எளிமைப்படுத்திக் கொண்டு, நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்ற எண்ணத்துடன் மேடை ஏறும்போது அது பேச்சாளனுக்கு கண்டிப்பாகக் கைகொடுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com