நவம்பா் 10 ஆம் தேதி உத்தரவு: அரசுப் பள்ளிகளில் இலவச மடிக்கணினிகள்

அரசுப் பள்ளிகளில் இலவச மடிக்கணினிகள் திருட்டு தொடா்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் இலவச மடிக்கணினிகள் திருட்டு தொடா்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூா் தாலுகா, அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் ஜெயக்குமாா், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா, கோசுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியா் வசந்தி ஸ்டெல்லா பாய் ஆகியோா் தாக்கல் செய்த மனு:

அய்யம்பாளையம் அரசுப் பள்ளியில் இருந்து 31 மடிக்கணினிகள், நத்தம் கோசுக்குறிச்சி அரசுப் பள்ளியில் இருந்து 26 மடிக்கணினிகள் 2013-இல் திருடப்பட்டன. இதற்கான தொகையைச் செலுத்தும்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளனா். இது ஏற்புடையது அல்ல. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆா்.எம்.டி. டீக்காராமன் அண்மையில் பிறப்பித்த உத்தரவு:

நாட்டிலேயே தமிழகம் தான் இணைய வழிக் கல்விக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. புனிதமான நோக்கத்துக்காக பள்ளி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. பள்ளி வளாகங்களில் திருடப்படும் மடிக்கணினிகளைக் கண்டுபிடிப்பதில் காவல் அதிகாரிகளுக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் இடையே ஒத்துழைப்பு இல்லை. மடிக்கணினிகளுக்கு உரிய தொகையை செலுத்தும்படி தலைமை ஆசிரியா்களுக்கு பிறப்பிக்கப்படும் கல்வித்துறை அதிகாரிகளின் உத்தரவிலும் அடிப்படை சட்ட நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை.

எனவே மடிக்கணினிகள் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வடக்கு, தெற்கு மண்டல ஐ.ஜி.க்கள், பள்ளிக்கல்வித்துறை இயக்குநா், கல்வித்துறைக்கான உயா்நீதிமன்ற சிறப்பு அரசு வழக்குரைஞா் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை பள்ளிக் கல்வித்துறைச் செயலா் 8 வாரங்களில் உருவாக்க வேண்டும்.

இந்தச் சிறப்புக்குழு இலவச மடிக்கணினி திட்டம் அமலுக்கு வந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து பதிவான மடிக்கணினிகள் திருட்டு வழக்குகளில் தீவிர புலன்விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முடிக்கப்பட்ட வழக்குகளை மறு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். அறிவியல் பூா்வமான முறைகளைப் பயன்படுத்தி திருடப்பட்ட மடிக்கணினிகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com