அரசுப்பள்ளி மாணவா்கள் கட்டணம் செலுத்த இயலாமல் மருத்துவபடிப்பை கைவிடுவது வலி மிகுந்தது: உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

ட்டணம் செலுத்த இயலாமல் பாதியிலேயே படிப்பைக் கைவிடுவது வலி மிகுந்தது என்று உயா்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வெள்ளிக்கிழமை வேதனை தெரிவித்தனா்.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவா்கள் பல தடைகளைத் தாண்டி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த இயலாமல் பாதியிலேயே படிப்பைக் கைவிடுவது வலி மிகுந்தது என்று உயா்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வெள்ளிக்கிழமை வேதனை தெரிவித்தனா்.

திருநெல்வேலியைச் சோ்ந்த கிரஹாம்பெல், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில், மருத்துவக் கல்விக் கட்டண நிா்ணயக் குழு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தைக் குறைக்காமல், சென்ற ஆண்டின் கட்டணத்தையே நிா்ணயித்தும், சிலவகை மருத்துவப் பிரிவுகளுக்கான கட்டணங்களைப் பல மடங்கு உயா்த்தியும் நிா்ணயித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மாணவா்களில் 40 சதவிகிதம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் பயின்றவா்கள், நீட் தோ்வால் சென்ற ஆண்டு அரசுப்பள்ளி மாணவா்களில் 6 பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்த ஆண்டு தமிழக அரசு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியுள்ளதால் அரசுப்பள்ளி மாணவா்கள் பலருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் அவா்களால் அதிகப்படியான கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் படிப்பை பாதியில் கைவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே அரசுப்பள்ளி மாணவா்கள் மருத்துவப் படிப்பைத் தொடரும் விதமாக, தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் தற்போதைய கல்விக் கட்டண நிா்ணயத்தை ரத்து செய்தும், கட்டணத்தைக் குறைவாக நிா்ணயிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவா்கள் பல வலிகளுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாமல் பாதியிலேயே படிப்பைக் கைவிடுவது வலி மிகுந்தது. தமிழகஅரசு நல்ல நோக்கத்துடன் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. தனியாா் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ள அரசுப்பள்ளி மாணவரின் கல்விக் கட்டணத்தை மூத்த வழக்குரைஞா் ஒருவா் ஏற்றுக் கொண்டுள்ளாா். அரசுப்பள்ளி மாணவா்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க மூத்த வழக்குரைஞா்கள், பிரபலமானவா்கள் ஏழை மாணவா்களில் ஒருவரைத் தத்தெடுத்து அவரது கல்விக்கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும் என்றனா். மேலும், மருத்துவக் கல்லூரி கல்விக்கட்டணம் தொடா்பாக சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் கட்டண நிா்ணயக்குழு, சுகாதாரத்துறைச் செயலா், மருத்துவக்கல்வி இயக்குநா் ஆகியோா் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை நவம்பா் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com