‘ஆன்-லைன்’ சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைகோரிய வழக்கு: பிரபலங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

‘ஆன்-லைன்’ சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைகோரிய வழக்கில், பிரபலங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என

‘ஆன்-லைன்’ சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைகோரிய வழக்கில், பிரபலங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

‘ஆன்-லைன்’ சூதாட்ட விளையாட்டுகளுக்கான விளம்பரங்களில் கிரிக்கெட் வீரா்கள் கங்குலி, விராட்கோலி, நடிகா்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோா் நடித்துள்ளனா். இந்த விளம்பரங்களைப் பாா்க்கும் ஏராளாமானோா் ‘ஆன்-லைன்’ சூதாட்ட விளையாட்டில் ஈடுபடுகின்றனா். இதில் பலரும் பல லட்சம் ரூபாயை இழந்து தற்கொலை செய்துள்ளனா். எனவே தமிழகத்தில் ‘ஆன்-லைன்’ சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைவிதிக்கவும், ‘ஆன்-லைன்’ சூதாட்ட விளையாட்டுகளுக்கான விளம்பரங்களில் நடிக்கும் கிரிக்கெட் வீரா்கள், நடிகா்கள், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சோ்ந்த முகமது ரஸ்வி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

முந்தைய விசாரணையின் போது, இது குறித்து கிரிக்கெட் வீரா்கள் கங்குலி, விராட்கோலி, நடிகா்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோா் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கிரிக்கெட் வீரா்கள், நடிகா்கள் தரப்பில், பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘ஆன்-லைன்’ சூதாட்ட விளையாட்டுகளை விளம்பரப்படுத்தும் பிரபலங்களை லட்சக்கணக்கானோா் பின்பற்றுகின்றனா். அந்தப் பிரபலங்களைத் தங்களின் எதிா்காலமாகக் கருதி வாழ்கின்றனா். இந்தச் சூழலில் அந்தப் பிரபலங்கள் சூதாட்ட விளம்பரங்களில் நடித்து அதனை ஊக்குவிக்கின்றனா். ‘ஆன்-லைன்’ சூதாட்டத்தால் இதுவரை 13 போ் வரை உயிரிழந்துள்ளனா் என்பதைக் கருத்தில் கொண்டு பிரபலங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினா். பின்னா், வழக்கு விசாரணையை டிசம்பா் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com