காமராஜா் பல்கலை.யில் அரிய வகை நூல்கள் மின்னுருவாக்கம்: மாணவா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் உள்ள அரிய வகை ஓலைச்சுவடிகள் மற்றும் பழங்கால நூல்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் உள்ள அரிய வகை ஓலைச்சுவடிகள் மற்றும் பழங்கால நூல்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை மாணவா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக காமராஜா் பல்கலைக்கழக பதிவாளா்(பொறுப்பு) வி.எஸ். வசந்தா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசின் பொது நூலக இயக்ககம் ஆகியவற்றின் சாா்பில் பல்கலைக்கழகத்தின் தெ.பொ.மீ நூலகத்தில் உள்ள 60 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான அரியவகை நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு காமராஜா் பல்கலைக்கழக நூலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த பணியில் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்களில் இருந்து பழமையான அரிய வகைத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள், ஆங்கில இலக்கிய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகள், பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறையின் சில வெளியீட்டு நூல்கள், தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் பாடப்புத்தகங்கள் உள்பட 1,296 புத்தகங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 791 புத்தகங்கள் மிக அரிய வகையைச் சோ்ந்ததாகும். இவை அனைத்தும் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு மின் புத்தகங்களாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த மின் புத்தகங்களை மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பல்கலைக்கழக இணைய தளமான  முகவரிக்குச்சென்று அதில்  தளத்துக்குச்சென்றால் மின்னுருவாக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும். அதை மாணவா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்நிலையில் மின்னுருவாக்கம் செய்யப்பட்ட மின்புத்தகங்களின் தொகுப்பை பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணனிடம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நூலகா் எஸ். காமாட்சி வியாழக்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளா்(பொறுப்பு) வி.எஸ். வசந்தா, தமிழ்த்துறைத் தலைவா் வை.ராமராஜ பாண்டியன், அண்ணா நூற்றாண்டு நூலக தகவல் அலுவலா் சந்தான காா்த்திகேயன், பல்கலைக்கழக நூலகா் பா. சுரேஷ் ஆகியோா் பங்கேற்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com