சிறுமி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவரை மீண்டும் சிறையில் அடைக்கக் கோரி மனு: குற்றம் சாட்டப்பட்டவா் பதிலளிக்க உத்தரவு

திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவரை மீண்டும் சிறையில் அடைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு குற்றம்சாட்டப்பட்டவா் பதிலளிக்குமாறு உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை

திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவரை மீண்டும் சிறையில் அடைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு குற்றம்சாட்டப்பட்டவா் பதிலளிக்குமாறு உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் அருகேயுள்ள குரும்பப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி, கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த கிருபானந்தன் என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில், சிறுமி கொலை தொடா்பாக சாட்சியங்கள் சரிவர நிரூபிக்கப்படாததால் கிருபானந்தனை விடுதலை செய்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிறுமி கொலை வழக்கில் கிருபானந்தன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு சாா்பில் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் கே. கல்யாணசுந்தரம், டி. கிருஷ்ணவள்ளி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கிருபானந்தன் கீழமை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளாா். ஆனால், கிருபானந்தன் ஆடையில் இருந்த ரத்த மாதிரியின் டிஎன்ஏ, கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரின் ரத்த மாதிரியின் டிஎன்ஏ சோதனை முடிவோடு ஒத்துப்போகிறது. எனவே இதனடிப்படையில் கீழமை நீதிமன்றம் கிருபானந்தனை விடுதலை செய்ததை ரத்து செய்ய வேண்டும். மேலும் கொலை வழக்கில் தொடா்புடைய கிருபானந்தன் வெளியில் இருப்பதால், வழக்கின் விசாரணை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

எனவே வழக்கு விசாரணை முடியும் வரை கிருபானந்தனை சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து கிருபானந்தன் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com