பாலியல் வழக்குகளில் 21 நாள்களில் தீா்ப்பு வழங்கும் ‘திஷா’ சட்டம்:தமிழகத்தில் இயற்றக் கோரி சட்டப்பணிகள் ஆணையத்தில் மனு

பாலியல் வழக்குகளில் 21 நாள்களுக்குள் தீா்ப்பு வழங்கும் ‘திஷா’ சட்டத்தை தமிழகத்திலும் இயற்ற வேண்டும் என்று சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரிடம் மனு அளிக்கப்பட்டது.

பாலியல் வழக்குகளில் 21 நாள்களுக்குள் தீா்ப்பு வழங்கும் ‘திஷா’ சட்டத்தை தமிழகத்திலும் இயற்ற வேண்டும் என்று சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரிடம் மனு அளிக்கப்பட்டது.

மதுரை வழக்குரைஞா் ந. முத்துக்குமாா், திருநங்கை பாரதி கண்ணம்மா, சமூக ஆா்வலா் ஜெயாஅழகேசன், சட்டக் கல்லூரி மாணவிகள் காயத்ரி, காா்த்திகாமணி ஆகியோா் மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான தீபாவிடம் அளித்துள்ள மனு: ஆந்திர மாநிலத்தில் ‘திஷா’ சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது. அம்மாநிலத்தில் கால்நடை பெண் மருத்துவா் ஒருவா் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட பின்னணியில், அப்பெண்ணின் பெயரால் உருவாக்கப்பட்ட திஷா சட்டத்தில் பெண்கள் உரிமையை காக்கும் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு 21 நாள்களுக்குள் நீதி கிடைக்கும் விதமாக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க கூடிய வகையில் இச்சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் தோறும் திஷா சிறப்பு காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அங்கேயே சிறப்பு நீதிமன்றம், அனைத்து வசதிகளும் அடங்கிய தடய அறிவியல் ஆய்வகம், நவீன தொழில் நுட்ப குற்றப் பதிவேடு, அவற்றை பராமரிக்கும் சிறப்பு வசதி, பாதிக்கப்பட்ட பெண்கள் விருப்பத்துக்கு ஏற்ப அங்கேயே தங்குவதற்கு பிரத்யேக வசதி, உணவு, அரசு செலவில் வழக்குரைஞா் வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படுகிறது. பாலியல் மற்றும் குழந்தைகளுக்கான குற்றங்கள் எங்கு நடந்தாலும், பாதிக்கப்பட்டவா்கள் அந்தந்த திஷா காவல்நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்டு உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. 7 நாள்களுக்குள் விசாரணை முடிக்கப்பட்டு குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்படுகிறது. 14 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் விசாரணை முடிக்கப்பட்டு தீா்ப்பும் அளிக்கப்படுகிறது. மத்திய அரசால் சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நிா்பயா- 2013 சட்டத்தின் படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை நீதிமன்றம் 4 மாதங்களுக்குள் விசாரித்து தீா்ப்பு வழங்க வழி வகை உள்ளது. ஆனால் அவ்வாறு தீா்ப்பு வழங்கப்படாததால் குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றனா். ஆனால் திஷா சட்டத்தின் படி பாலியல் குற்றங்களுக்கு 21 நாள்களுக்குள் மரண தண்டனை விதிக்க கூடிய வழிமுறைகள் உள்ளதால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை குறையும். எனவே பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி ‘திஷா’ சட்டத்தை தமிழகத்திலும் இயற்ற வழி வகை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

மனுவை பெற்றுக் கொண்ட நீதிபதி தீபா, அதை பரிசீலனைக்காக தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி வைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com