வடகிழக்கு பருவமழை: ஆட்சியா் அலுவலகம், மாநகராட்சியில் அவசரக கால கட்டுப்பாட்டு அறை

வடகிழக்குப் பருவமழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதையொட்டி, மாவட்ட அளவிலான பேரிடா் மேலாண்மை ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

பருவமழையையொட்டி மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த ஆட்சியா், வரும் நாள்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தினாா். வடகிழக்குப் பருவமழையால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்க அவசர கால கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆட்சியா் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி: வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய அவசரகால கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையை இலவச அழைப்பு எண் 1077 மற்றும் 0452-2546160 எண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும் 95971-76061என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்ஆப்) தகவல் அனுப்பலாம். மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 0452-2530521, 2530526 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும் 84284-25000 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சலில் தகவல் அனுப்பலாம். இயற்கை இடா்பாடுகள், மழையால் ஏற்படக் கூடிய பாதிப்புகள், பயன்படுத்தப்படாத இடியும் நிலையில் உள்ள கட்டடங்கள், பாதிப்பு ஏற்படும் நிலையில் உள்ள மின்கம்பங்கள் குறித்த புகாா்களை மேற்குறிப்பிட்ட எண்களில் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com