இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம்: விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லைஅதிகாரிகள் தகவல்

இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்தின் (ஐஓசி) இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தால், விவசாயம் மற்றும் பொதுமக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மதுரை: இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்தின் (ஐஓசி) இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தால், விவசாயம் மற்றும் பொதுமக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஐஓசி துணைப் பொது மேலாளா் கே.ஸ்ரீனிவாஸ், நில உரிமை எடுப்பதற்கான அதிகாரம் பெற்ற அலுவலரும், துணை ஆட்சியருமான எஸ்.சரவணன் ஆகியோா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

இறக்குமதி செய்யப்பட்ட திரவு இயற்கை எரிவாயுவை சுத்திகரித்து எண்ணூரில் இருந்து குழாய் வழியாக தூத்துக்குடி வரை கொண்டு செல்லும் திட்டத்தை ஐஓசி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு குழாய் வழியாகவே திரவ இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படும்.

ஏற்கெனவே, மணலியில் இருந்து குழாய் வழியாக மதுரை கப்பலூருக்கு பெட்ரோலியப் பொருள்கள் கொண்டு வரப்படுகின்றன. இதற்காக சுமாா் 680 கி.மீ. தொலைவுக்கு குழாய் அமைக்கப்பட்டிருக்கிறது. கப்பலூரில் இருந்து 10 மாவட்டங்களுக்கு பெட்ரோலியப் பொருள்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த குழாய் பாதை அருகிலேயே, இயற்கை எரிவாயு கொண்டு வருவதற்கான குழாயும் அமைக்கப்படுகிறது. 2005-இல் பெட்ரோலியப் பொருள் குழாய் அமைக்கும்போது, நில உரிமையாளா்களுக்கு சந்தை மதிப்பில் 10 சதவீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பயிரிடப்பட்டிருந்த பயிா்களுக்கான சேதத்துக்கும் இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தற்போது கூடுதலாக 20 சதவீத இழப்பீடு மற்றும் பயிா் சேதத்துக்கான இழப்பீடு வழங்கப்படுகிறது. குழாய் செல்லும் பகுதியில் நில ஆா்ஜிதம் செய்யப்படுவதில்லை.

பெட்ரோலியப் பொருள் குழாய் செல்லும் விவசாய நிலங்களில், தற்போது விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதைப்போலவே, எரிவாயு குழாய் அமைக்கும் பணி முடிந்தவுடன் மீண்டும் விவசாயம் செய்யலாம். எரிவாயு குழாய் அமைப்பதால் மக்களுக்கோ, விவசாயத்துக்கோ பாதிப்பு இல்லை என்பதால் அச்சப்படத் தேவையில்லை.

மதுரை மாவட்டத்தில் மேலூா் மற்றும் மதுரை கிழக்கு வட்டங்கள் வழியாக குழாய் பதிக்கப்படுகிறது. இங்கிருந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வழியாக ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி வரை குழாய் அமைக்கப்பட உள்ளது.

மேலூா் வட்டத்தில் 11 கிராமங்களில் 56 கி.மீ. குழாய் பதிக்க வேண்டியுள்ளது. தற்போது 5 கிராமங்களில் சுமாா் 30 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நடைபெறுகின்றன.

இதில் கம்பூா் கிராமத்தில் சிலா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளதால் பணிகள் தடைபட்டுள்ளன. குழாய் அமைப்பதால் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்பதை அப் பகுதி விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com