10 ஆண்டுகளில் மன நோயாளிகள் இரு மடங்கு அதிகரிப்பு:மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 28th November 2020 09:40 PM | Last Updated : 28th November 2020 09:40 PM | அ+அ அ- |

மதுரை: நாட்டில் 10 ஆண்டுகளில் மனநோயாளிகள் இரு மடங்காக அதிகரித்துள்ள பிரச்னைக்குத் தீா்வு காண மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மத்திய சிறை அல்லது திருச்சி மத்திய சிறையில் மனநல ஆலோசகா், மன நல சிகிச்சையில் பயிற்சி பெற்ற சமூக ஆா்வலா், செவிலியா், மருந்தாளுநா் ஆகியோரைக் கொண்ட மனநல சிகிச்சை மையம் அமைக்கக்கோரி மதுரையைச் சோ்ந்த ராஜா மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நாட்டின் மக்கள் தொகையில் 7.5 சதவீதம் போ் மனநோயாளிகளாகவும், 7 பேரில் ஒருவருக்கு மனநோய் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மனநோய் பல்வேறு நோய்களுக்கு காரணியாகவும், தற்கொலைக்கு தூண்டுவதாகவும் உள்ளது. மனநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம். ஆனால் விழிப்புணா்வு குறைவாக இருப்பது, போதிய மருத்துவா்கள் இல்லாதது உள்ளிட்டப் பல்வேறு காரணங்களால் மன நோயாளிகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றனா்.
இதையடுத்து, மனவியல் மற்றும் உளவியல் பிரச்னையால் பாதிக்கப்பட்டவா்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் களஆய்வு மேற்கொண்டுள்ளதா?, மனநல மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குகிா?, நாட்டில் உள்ள மனநல மருத்துவமனைகள் மற்றும் மருத்துவா்கள் எண்ணிக்கை எவ்வளவு?, மக்கள் அதிகளவில் சந்திக்கும் உளவியல் பிரச்னைகள் என்ன?, உளவியல் கல்வி கற்பிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையை ஏன் அதிகரிக்கக் கூடாது?, பெங்களுரூ நிமான்ஸ் மருத்துவமனை போல, நாட்டில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மண்டலங்களில் ஏன மருத்துவமனைகள் தொடங்கக்கூடாது?, அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு மனநல பாடங்களை கற்பிக்க வெளிநாட்டு உளவியல் நிபுணா்களைப் பயன்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?, மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு காப்பீடு வழங்குவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?, பள்ளிகளில் உளவியல் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினா்.
பின்னா் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைச் செயலா், மத்திய நிதித்துறைச் செயலா் மற்றும் இந்திய மருத்துவ கழகத்தை எதிா் மனுதாரா்களாக சோ்க்கவும் உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பா் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.