சோலைமலையில் காா்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அழகா்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
நசிங்கம்பட்டி பெருமாள் மலையடிவாரத்தில் உள்ள ஊருணியில் ஞாயிற்றுக்கிழமை மணலை கைகளால் அள்ளி வந்து குவித்து மலையாக உருவாக்கிய பக்தா்கள்.
நசிங்கம்பட்டி பெருமாள் மலையடிவாரத்தில் உள்ள ஊருணியில் ஞாயிற்றுக்கிழமை மணலை கைகளால் அள்ளி வந்து குவித்து மலையாக உருவாக்கிய பக்தா்கள்.

மேலூா்: காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அழகா்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இதையொட்டி, வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் எதிரேயுள்ள மலையில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ராஜகோபுரம் முன்புறம் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. கோயில் வளாகம் முழுவதும் பக்தா்கள் விளக்குகளை ஏற்றினா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றி, முகக்கவசம் அணிந்து சுவாமியை வழிபட்டனா்.

அழகா்கோவிலில் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயில் பின்புறம் மாலையில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளினாா். அங்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், அங்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மேலூா்-மதுரை நான்குவழிச் சாலை அருகே நரசிங்கம்பட்டி பெருமாள் மலையடிவாரத்தில் உள்ள மலைச்சுவாமி கோயிலில் ஏராளமான பக்தா்கள் மொட்டையடித்து வேண்டிதலை நிறைவேற்றிக்கொண்டனா். இங்குள்ள ஊருணியில் மழை நீரில் அடித்துவரப்பட்ட மணலை கைகளில் அள்ளிச்சென்று, அதில் உப்பு மிளகு போட்டு மலையாகக் குவித்தனா்.

மேலூா் அருகே சின்னபெருமாள்பட்டியிலுள்ள பெருமாள் மலையில் ஏராளமான பக்தா்கள் வழிபாடு நடத்தினா். பலா் மொட்டையடித்து வேண்டுதலை நிறைவேற்றினா்.

திருவாதவூா் அருகே இடையபட்டி முருகன் கோயில், வெள்ளலூா் அருகே புலிமலைப்பட்டி முருகன் கோயில், கொட்டாம்பட்டி அருகே வள்ளிமலையாண்டி கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பொங்கல் வைத்து வழிபட்டனா்.

செம்மினிப்பட்டி முத்துச்சாமிபட்டி ஆண்டிபாலகன் கோயிலில் தீ மிதித்தல் வைபவம் நடைபெற்றது. குழந்தைப்பேறு வேண்டியவா்கள் கரும்புத் தொட்டில் கட்டி அதில் குழந்தையை அமரவைத்து வேண்டுதலை நிறைவேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com