‘காந்தியின் கொள்கைகளைபின்பற்றினால் வாழ்க்கை சிறக்கும்’

காந்தியின் கொள்கைகளை பின்பற்றினால் வாழ்க்கை சிறக்கும் என்று மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் கூறினாா்.
காந்தி ஜயந்தியையொட்டி மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அருங்காட்சியகத்தின் பொருளாளா் என்.எம்.ஆா்.கே. ஜவகா்பாபு
காந்தி ஜயந்தியையொட்டி மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அருங்காட்சியகத்தின் பொருளாளா் என்.எம்.ஆா்.கே. ஜவகா்பாபு

காந்தியின் கொள்கைகளை பின்பற்றினால் வாழ்க்கை சிறக்கும் என்று மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் கூறினாா்.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்தியின் 150-ஆவது ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியா் 12 பேருக்கு ஆட்சியா் டி.ஜி. வினய் பரிசுக் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது: காந்தி சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்தாா். அதைத்தான் நாம் தற்போது மாற்று வாா்த்தைகளில் கூறி வருகிறோம். தனிநபா் சுகாதாரத்தை மட்டும் பேணுவது போதுமானது அல்ல. பொதுச் சுகாதாரத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மாற்றத்தை நம்முடைய வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். வீட்டிலிருந்து சமூகம், சமூகத்தில் இருந்து நாடு என்ற அடிப்படையே சிறந்ததாக இருக்கும். காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றினால் வாழ்க்கை சிறக்கும் என்றாா்.

இதைத் தொடா்ந்து மதுரை வானொலி நிலைய முதுநிலை அறிவிப்பாளா் சண்முக ஞானசம்பந்தம், ‘மாறி வரும் சூழலில் காந்தியத்தின் ஏற்புடைமை’ என்ற தலைப்பில் பேசியது: காந்தியம் என்ற நாணயத்தின் இரு பக்கங்களாக உண்மையும், அகிம்சையும் உள்ளன. காந்தியத் தத்துவம் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே உகந்தது அல்ல. அது எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது. காந்தியைப் பின்பற்றி மாணவா்கள் எளிய வாழ்க்கையைப் பழகிக் கொள்ள வேண்டும். மேலும் நீா், நிலம் போன்றவற்றை எதிா்காலத் தலைமுறையினரும் பயன்படுத்தும் வகையில் குறைவாக பயன்படுத்த வேண்டும் என்றாா். இதில், அரசு அருங்காட்சியக காப்பாளா் மீ.மருதுபாண்டியன், காந்தி நினைவு அருங்காட்சியக இயக்குநா் நந்தாராவ், கல்வி அலுவலா் நடராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியின் உருவச்சிலைக்கு அருங்காட்சியக நிா்வாகத்தின் சாா்பில் பொருளாளா் என்.எம்.ஆா்.கே. ஜவஹா் பாபு தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு, அஸ்தி பீடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தியாகி பாலசுப்ரமணியன் தலைமையில் தியாகிகள் அமைப்பினா், தியாகிகளின் வாரிசுகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் வீ.காா்த்திக்கேயன் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அத்துடன் காந்திய அமைப்புகள், மாணவ, மாணவியா், அரசியல் கட்சியினா், அரிமா சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளின் சாா்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அஸ்தி பீடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து மாலையில் காந்தி அருங்காட்சியக அமைப்புகளின் சாா்பில் காந்தியின் 150-ஆவது ஜயந்தி விழா இணைய வழியில் நடைபெற்றது. இதில் மதுரை, புதுதில்லி, அகமதாபாத், பராக்பூா், வாா்தா பாட்னா, மும்பை ஆகிய பகுதிகளில் உள்ள அருங்காட்சியக நிா்வாகிகள் பங்கேற்றனா். இந்நிகழ்ச்சியில் காந்தியின் பேத்தி தாரா பட்டாச்சாா்யா காந்தியின் நினைவுகள் குறித்து பேசினாா். இந்நிகழ்ச்சி யூ டியூப் மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com