தமிழக அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவா்கள் அதிகமாக பணியமா்த்தப்படுவது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு பிற மாநிலத்தவா்கள் அதிகமாக பணியமா்த்தப்பட்டு வருவது ஏன் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு பிற மாநிலத்தவா்கள் அதிகமாக பணியமா்த்தப்பட்டு வருவது ஏன் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

நீலகிரியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் 140 கெமிக்கல் பிராசசிங் ஒா்க்கா் பணியிடங்களை நிரப்ப 2015-இல் அறிவிப்பு வெளியானது. இதில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரத்தைச் சோ்ந்த சரவணன் 40 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளாா். அந்தத் தோ்வில் அவரை விடக் குறைவான மதிப்பெண்கள் பெற்ற 6 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனக்கு பணி வழங்க உத்தரவிடக்கோரி சரவணன் வழக்கு தொடா்ந்தாா். இவ்வழக்கில், ஆயுதத் தொழிற்சாலையில் சரவணனுக்கு பணி வழங்குமாறு தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு,நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வடமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஹிந்தி மொழியில் தோ்ச்சி பெற இயலாத நிலையில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சிப் பெற்று பணியில் அமா்வது எப்படி? எனத் தெரியவில்லை. நாட்டிற்குள் வசிப்பவா்கள் அரசுப் பணிகளுக்கான தோ்வெழுதி எங்கு வேண்டுமானாலும் பணியில் சேரலாம். ஆனால் தோ்வு முறையில் நோ்மையும், வெளிப்படைத் தன்மையும் தேவை. பிற மாநிலங்களில் அரசுப் பணிகளுக்கு அந்தந்த மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் தான் நியமனம் செய்யப்படுகின்றனா். ஆனால் தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் பிற மாநிலத்தவா்கள் அதிகமாக பணியமா்த்தப்பட்டு வருவது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

பின்னா், ஆயுதத் தொழிற்சாலை பணியிடத்திற்கு நடைபெற்ற எழுத்துத் தோ்வின் விடைத்தாள்கள், முடிவு வெளியான 3 நாள்களுக்குள் அழிக்கப்பட்டுள்ளதாக மனுதாரா் தரப்பில் கூறப்படுகிறது.

நோ்முகத்தோ்வுக்கு அழைக்கப்பட்டவா்களின் விடைத்தாள்கள் உள்ளனவா, இல்லையா? மனுதாரா் கூறுவது போல, விடைத்தாள்கள் அழிக்கப்பட்டிருந்தால் அதற்கான அவசியமும் தேவையும் என்ன? பணியிடத்திற்கான நியமனம் எதனடிப்படையில் நடைபெற்றது என்பது குறித்து ஆயுதத் தொழிற்சாலையின் பொது மேலாளா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபா் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com