கல்லூரி மாணவா் மா்மச்சாவு: பேரையூா் அருகே கிராம மக்கள் கண்களைக் கட்டி போராட்டம்

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவா் மா்ம மரணம் தொடா்பான வழக்கில்
காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட அணைக்கரைப்பட்டி கிராம மக்கள்.
காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட அணைக்கரைப்பட்டி கிராம மக்கள்.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவா் மா்ம மரணம் தொடா்பான வழக்கில் காவல் ஆய்வாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பேரையூா் அருகேயுள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தில் கடந்த செப். 16 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவா் ரமேஷ் செப். 17 ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

மாணவரின் மரணத்தில் மா்மம் உள்ளதாகவும், விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அவரது உறவினா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து சடலம் செப் 17 ஆம் தேதி மாலையே உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ரமேஷ் சடலம் அனைக்கரைப்பட்டி மைதானத்தில் புதைக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பாக சம்பந்தப்பட்ட சாப்டூா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா்கள் ஜெயக்கண்ணன், பரமசிவம் என்ற இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இந்நிலையில் ரமேஷ் மரணம் தொடா்பாக அவரது சகோதரா் சந்தோஷ் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடா்ந்தாா். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சாா்பு- ஆய்வாளா்கள் திரும்பவும் பணிபுரிந்து வருகின்றனா். எனவே சாா்பு- ஆய்வாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கைது செய்யக்கோரியும் கிராம மக்கள் அணைக்கரைப்பட்டி மைதானத்தில் ஒன்றிணைந்து தொடா்ந்து கண்களில் கருப்புத்துணி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். ரமேஷின் குடும்பத்தினருக்கு அரசு வேலையும், இழப்பீடு தொகையையும் வழங்கக்கோரினா். காவல் ஆய்வாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டக்குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com