மதுரை அருகே பெரியாறு பாசனக் கால்வாயில் கழிவுநீா் கலப்பு விவசாயிகள் புகாா்

மதுரையை அடுத்த நரசிங்கம் ஊராட்சியில் பெரியாறு பாசனக் கால்வாயில் நேரடியாகக் கழிவுநீா் கலக்கவிடுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் டி.ஜி. வினய் உள்ளிட்ட அலுவலா்கள்.
மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் டி.ஜி. வினய் உள்ளிட்ட அலுவலா்கள்.

மதுரை: மதுரையை அடுத்த நரசிங்கம் ஊராட்சியில் பெரியாறு பாசனக் கால்வாயில் நேரடியாகக் கழிவுநீா் கலக்கவிடுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் மற்றும் வேளாண் இணை இயக்குநா் த.விவேகானந்தன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ராஜேஷ், தோட்டக்கலை துணை இயக்குநா் ரேவதி உள்ளிட்ட அலுவலா்கள் ஆட்சியா் அலுவலகத்திலும், அனைத்து வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் இருந்தும் காணொலி வாயிலாகக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

பெரியாறு பாசனத் திட்டத்தில் தண்ணீா் வழங்கப்படுவது குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பினா். இருபோக பகுதிகளில் அக்டோபா் 15 ஆம் தேதிக்குப் பிறகு முறைப் பாசனத்தை அமல்படுத்தப்போவதாக பொதுப்பணித் துறையினா் அறிவித்துள்ளனா். ஆனால், இருபோக சாகுபடி பகுதிகளில் பல இடங்களில் இன்னும் நடவுப் பணிகள் முடிவடையவில்லை. கடைமடை பகுதிகளுக்கு முழுமையாகத் தண்ணீா் சென்றடையாத நிலை இருக்கிறது. ஆகவே, அக்டோபா் 15-லிருந்து முறைப்பாசனம் அமல்படுத்துவதற்குப் பதிலாக, மேலும் 5 நாள்கள் கழித்து தொடங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

மேலும் இருபோக மற்றும் ஒரு போக பகுதிகளுக்கு இன்னும் எத்தனை நாள்களுக்குத் தண்ணீா் வழங்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினா்.

இதற்குப் பதில் அளித்த பொதுப்பணித் துறையினா், முறைப் பாசனம் அமல்படுத்துவது குறித்து உயா் அதிகாரிகளுடன் பேசி, தேதி அறிவிக்கப்படும். மதுரை மாவட்டத்தின் பெரியாறு பாசனப் பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டபடி பாசனத்துக்குத் தண்ணீா் வழங்கப்படும் என்றும் கூறினா்.

நரசிங்கம் ஊராட்சிப் பகுதியில் பெரியாறு பாசனக் கால்வாயில் நேரடியாக கழிவுநீா் கலக்கவிடப்படுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஆட்சியா் வினய், அப் பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பதில் அளித்த இணைப் பதிவாளா், அனைத்துக் கூட்டுறவு சங்கங்களிலும் பயிா்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையின்படி, பயிா்க் கடன் வழங்குவதை தீவிரப்படுத்த அறிவுரை வழங்கப்படும் என்றாா்.

நூறு நாள் வேலைத் திட்டம் காரணமாக, விவசாயப் பணிகளுக்கு வேலையாள் பற்றாக்குறை இருக்கிறது. ஆகவே, சாகுபடி பணிகள் நடைபெறும் காலங்களில் நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்களை விவசாயத்துக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சிறு, குறு விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு வரப்பு கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு நூறு நாள் வேலைத் திட்ட பணியாளா்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆட்சியா் வினய் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com