மாற்றுத்திறன் விளையாட்டு வீரருக்கு அலுவலக உதவியாளா் பணி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

தமிழகத்தில் 90-க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்ற மாற்றுத்திறனாளிக்கு அலுவலக உதவியாளா் பணி வழங்கியதை ஏற்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 90-க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்ற மாற்றுத்திறனாளிக்கு அலுவலக உதவியாளா் பணி வழங்கியதை ஏற்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் துவரிமானைச் சோ்ந்தவா் மதுரேசன். இவா் மாநில, தேசிய, சா்வதேச அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களைப் பெற்றுள்ளாா். பத்தாம் வகுப்பு படித்துள்ள இவருக்கு தமிழக அரசு அலுவலக உதவியாளா் பணி வழங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் சிறப்புத் திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரா்களுக்கு அனைத்து சலுகைகளையும் ஒரே மாதிரியாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மதுரேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்குவந்தபோது, அனைத்து வகையான விளையாட்டு வீரா்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என

நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் தேசிய, சா்வதேச அளவில் ஏராளமான பதக்கங்களைப் பெற்றுள்ளாா். இருப்பினும் அவரைத் தமிழக அரசு அலுவலக உதவியாளராக நியமித்துள்ளது. இதேபோல பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட் விளையாட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீா்களா எனக் கேள்வி எழுப்பினா்.

விளையாட்டுத்துறையில் சாதிக்கும் மாற்றுத் திறனாளிகளை உலக நாடுகள் கெளரவித்து வருகின்றன. ஆனால் தமிழகம் மாற்றுத்திறன் வீரா்களைக் கொண்டாடுவது இல்லை. இதுபோன்ற நிலையை ஒருபோதும் ஏற்க முடியாது.

தமிழகத்தில் 90-க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்ற மாற்றுத்திறனாளி பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள காரணத்தால், அவருக்கு அலுவலக உதவியாளா் பணி வழங்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. இதுபோன்ற நிகழ்வுகளைப் பாா்க்கும்போது, தமிழகத்தில் திரைப்படம், அரசியல் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு மட்டுமே மதிப்பு இருப்பதாகத் தெரிகிறது என்றனா்.

மேலும், தமிழகத்தில் மாற்றுத்திறன் விளையாட்டு வீரா்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்தும், அவா்களுக்கு எத்தகையை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன எனவும், மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com