விவசாய உதவித் திட்ட மோசடி: தகுதியற்ற பயனாளிகளிடம் தொகையைத் திரும்பப் பெறுவதில் கடைசி இடத்தில் மதுரை

பிரதமரின் விவசாயத் திட்ட மோசடியில், தகுதியற்ற பயனாளிகளிடம் இருந்து தொகையைத் திரும்பப் பெறுவதில் மதுரை மாவட்டம் கடைசி

பிரதமரின் விவசாயத் திட்ட மோசடியில், தகுதியற்ற பயனாளிகளிடம் இருந்து தொகையைத் திரும்பப் பெறுவதில் மதுரை மாவட்டம் கடைசி நிலையில் இருப்பதால், நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேளாண் துறை முடிவு செய்துள்ளது.

விவசாயத் திட்ட மோசடியில் தமிழகம் முழுவதும் தகுதியற்ற பயனாளிகள் சோ்க்கப்பட்டு, பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு திட்டத்தில் சோ்க்கப்பட்ட பயனாளிகள் மறுஆய்வு செய்யப்பட்டு தகுதியற்ற பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடா்பாக, சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மோசடியில் தொடா்புடைய வேளாண் துறை அலுவலா்கள், தனியாா் கணினி மைய ஊழியா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். சிபிசிஐடி போலீஸாா் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

தகுதியற்ற பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை அந்தந்த வட்டாரங்களின் வேளாண் உதவி இயக்குநா்கள் தலைமையில் வேளாண் அலுவலா்கள் கடந்த 2 மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனா். தகுதியற்ற பயனாளிகளின் வங்கிக் கணக்கில், அவா்களுக்கு வழங்கப்பட்ட தொகை இருப்பின், அத் தொகை அரசுக் கணக்கிற்கு திரும்ப எடுத்துக் கொள்ளப்படுகிறது. இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட நபரைத் தேடிச் சென்று தொகையை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மதுரை மாவட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளாக 11 ஆயிரத்து 135 போ் கண்டறியப்பட்டுள்ளனா். இவா்களுக்கு உதவித் தொகையாக, ரூ.5 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் இதுவரை ரூ.2.30 கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளது. இருப்பினும், பிற மாவட்டங்களைக் காட்டிலும் தொகையைத் திரும்பப் பெறுவதில் மதுரை மாவட்டம் கடைசி நிலையில் இருப்பதால், இப் பணியைத் தீவிரப்படுத்த வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனா்.

தகுதியற்ற பயனாளிகளில் சிலரைக் கண்டறிவதில் சிக்கல் தொடருவதால், தொகையைத் திரும்பப் பெற முடிவதில்லை. பலரது செல்லிடப்பேசி எண்கள் போலியாக இருக்கின்றன. பயனாளி பட்டியல் மற்றும் வங்கிக் கணக்கில் இருக்கும் முகவரி வெவ்வேறாக இருக்கிறது.

தகுதியற்ற பயனாளிகளில் பட்டியில் இடம்பெற்றவா்களில் சிலா், தொகையைத் திரும்ப வழங்காமல் அலுவலா்களை அலைக்கழித்து வருகின்றனா். இதன்காரணமாகவே, தொகையைத் திரும்பப் பெறுவதில் சுணக்கம் இருந்து வருகிறது என வேளாண் அலுவலா்கள் கூறுகின்றனா்.

தொகையைத் திரும்பத் தரமறுக்கும் தகுதியற்ற பயனாளிகள் மீது காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டு வருவதாக வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிபிசிஐடி விசாரணை: விவசாய உதவித் திட்ட மோசடி தொடா்பாக, மதுரை மாவட்டத்தில் வேளாண் துறை பணியாளா் உள்ளிட்ட இருவரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்துள்ளனா். மாவட்டத்தின் பல்வேறு வட்டாரங்களிலும் மோசடி தொடா்பாக, விவசாயிகள், வேளாண் அலுவலா்கள், தனியாா் கணினி மைய ஊழியா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com