வைகை ஆற்றில் படித்துறைக்கு இடம் விடாமல் சாலை அமைப்பு

மதுரை வைகை ஆற்றில் படித்துறை அமைக்க இடம் விடாமல் சாலை அமைக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
மதுரை ஓபுளாபடித்துறை வைகை ஆற்றில் படித்துறைக்காக விடப்பட்டிருந்த பகுதியில் நடைபெறும் சாலைப்பணி.
மதுரை ஓபுளாபடித்துறை வைகை ஆற்றில் படித்துறைக்காக விடப்பட்டிருந்த பகுதியில் நடைபெறும் சாலைப்பணி.

மதுரை வைகை ஆற்றில் படித்துறை அமைக்க இடம் விடாமல் சாலை அமைக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

மதுரை நகரில் வைகை ஆற்றின் இருகரைகளிலும் பல ஆண்டுகளாக படித்துறைகள் இருந்து வந்தன. கோயில் திருவிழாக்கள், முன்னோா் ஈமக்கிரியை உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு படித்துறைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

நகரில் ஆற்றின் இரு கரைகளிலும் 13-க்கும் மேற்பட்ட படித்துறைகள் இருந்து வந்தன. இதில் பேச்சியம்மன் படித்துறை, அனுமாா் படித்துறை, குருவித்துறை படித்துறை, ஓபுளாபடித்துறை ஆகியவை முக்கியமானவை.

இந்நிலையில் ஆற்றின் இரு கரைகளிலும் சாலைகள் அமைக்கப்பட்டபோது பல படித்துறைகள் அகற்றப்பட்டன. இதற்கிடையே சீா்மிகுநகா்த் திட்டத்தின்கீழ் வைகை ஆற்றில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஆற்றுக்குள் இரு புறமும் சாலைகள் அமைப்பது, பூங்காக்கள் அமைப்பது, ஆற்றில் தடுப்புச்சுவா் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் எஞ்சியிருந்த சில படித்துறைகளும் முழுமையாக அகற்றப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வைகை ஆற்றில் படித்துறைகள் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வைகை நதி மக்கள் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டங்களும் நடத்தின.

மேலும் இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகத்திடம் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் கேள்விகள் எழுப்பியபோது வைகை ஆற்றில் படித்துறைகள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்திருந்தது. ஆற்றின் சில பகுதிகளில் படித்துறை அமைப்பதற்காக இடங்களும் விடப்பட்டிருந்தன. ஆனால் தற்போது பேச்சியம்மன் படித்துறை, ஓபுளா படித்துறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் படித்துறை அமைக்க விடப்பட்டிருந்த இடங்களிலும் சாலை அமைக்கும் பணி நடந்து வருகின்றன. இதில் ஓபுளாப் படித்துறை ஆற்றில் சாலை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டபோது அங்கு ஏற்கெனவே மூடப்பட்டிருந்த படித்துறைகளில் இருந்து பெரிய அளவிலான கருங்கற்கள் வெளியே வந்தன. அந்த கற்களை வெளியே எடுத்து வேறு பயன்பாட்டுக்கு கொண்டு செல்லாமல் கருங்கற்கள் மீதே சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே படித்துறைக்காக விடப்பட்ட இடங்களில் சாலை அமைப்பதை நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com