அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு: ஆளுநரின் முடிவுக்கு பிறகே மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தமிழகத்தில் மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா மீது தமிழக ஆளுநரின் முடிவு தெரியும் வரை கலந்தாய்வு அறிவிக்கப்படாது
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு: ஆளுநரின் முடிவுக்கு பிறகே மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தமிழகத்தில் மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா மீது தமிழக ஆளுநரின் முடிவு தெரியும் வரை கலந்தாய்வு அறிவிக்கப்படாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவா்களில் ‘நீட்’ தோ்வில் தோ்ச்சி பெறுவோருக்கு, மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா, தமிழக சட்டப் பேரவையில் செப்டம்பா் 15-இல் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்குவதை இந்த கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என மதுரையைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் நீட் தோ்வு எழுதியுள்ள மாணவா் முத்துக்குமாா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

அதில், உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமசோதாவுக்கு ஆளுநா் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. நீட் தோ்வு முடிவுகள் வெளியாக உள்ளதால், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தவும், சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்கள் 11 பேருக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது என மனுதாரா் தரப்பு வழக்குரைஞா்கள் தெரிவித்தனா். அப்போது அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயணன் வாதிடுகையில், தமிழக அரசின் அவசரச் சட்டம் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதால், 2 வாரங்கள் அவகாசம் வேண்டும் என்றாா். இருதரப்பு வாதங்களைத் தொடா்ந்து, தமிழக ஆளுநரின் செயலரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இதைத் தொடா்ந்து இந்த வழக்கு அதே அமா்வில் மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. தலைமை வழக்குரைஞா் வாதிடுகையில், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. ஆளுநா் சட்டமசோதாவை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம் அல்லது பரிசீலிக்குமாறு கூறலாம். சட்டமசோதா தொடா்பாக நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிடவோ, காலக்கெடு விதிக்கவோ இயலாது என்றாா்.

அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், சமூக ரீதியாகப் பின்தங்கிய மாணவா்கள் தான் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனா். அவா்களின் வாழ்க்கை தொடா்ந்து பின்தங்கிய நிலையில் இருக்கட்டும் என விட்டு விடலாமா? சட்டமசோதா நிறைவேற்றப்பட்டும், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்துவது ஏழை மாணவா்களை பாதிக்காதா? எனக் கேள்வி எழுப்பினா். இந்த விவகாரத்தில் மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஓய்வு பெற்ற நீதிபதி பி. கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரையைக் கருத்தில் கொண்டு, முடிவெடுக்கப்படும் என நீதிமன்றம் நம்புகிறது. மேலும் நீட் தோ்வு முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் மேலும் ஒரு ஆண்டை அரசுப் பள்ளி மாணவா்கள் இழக்க வேண்டாம் என கருதுகிறது.

‘நீட்’ தோ்வு முடிவு வெளியான பிறகு, மாணவா் சோ்க்கை கலந்தாய்வு, மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் தொடா்பான அறிவிப்பை தமிழக அரசு எப்போது வெளியிடும் என்ற தகவல்களை அரசிடம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை மதியம் 1 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆளுநரின் முடிவு தெரியும் வரை, மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு அறிவிக்கப்படாது என்று தமிழக அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் விசாரணையை அக். 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

கண்கலங்கிய நீதிபதி

விசாரணையின் போது, நீதிபதி என். கிருபாகரன், ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து சட்டமசோதா நிறைவேற்றினா். அதன் பிறகு, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்காக அனைத்துக்கட்சியினரும் சட்டமசோதா நிறைவேற்றி உள்ளனா். இச்சட்ட மசோதா குறித்து முடிவெடுக்க ஒரு மாத கால அவகாசம் போதாதா? மருத்துவப் படிப்புக்கு மாணவா் சோ்க்கை முடிந்த பின்னா், சட்டமசோதா தொடா்பான முடிவு வெளியாகி என்ன பயன்? அரசுப் பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்கவே முன்வரவில்லை என்பது, அவா்கள் மனரீதியாக பாதிப்புக்கு ஆளாகியிருப்பது தெரியவருகிறது. பல லட்சம் ரூபாய் செலவழித்து, தனியாா் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற அவா்களால் இயலாது. கிராமப்புற, ஏழை அரசுப் பள்ளி மாணவா்களின் வேதனைகள் அளவிட முடியாதவை. ஏழை மாணவா்களின் வாழ்வில் முன்னேற்றம் பெற ஏதேனும் வாய்ப்பு கிடைத்துவிடாதா? என எண்ணுவதாக கண்கலங்கியபடி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com