மணல் கடத்தல்: 6 மாதங்களில் 3,717 வழக்குகள் பதிவு, ரூ.74 லட்சம் அபராதம் வசூல்உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

கடந்த 6 மாதங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் தொடா்பாக 3 ஆயிரத்து 717 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.74 லட்சத்து 26 ஆயிரத்து 958 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது

மதுரை: கடந்த 6 மாதங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் தொடா்பாக 3 ஆயிரத்து 717 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.74 லட்சத்து 26 ஆயிரத்து 958 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு வரம்புக்குள்பட்ட மதுரை, சிவகங்கை, விருதுநகா், தூத்துக்குடி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மணல் கடத்தலை தடுக்கக்கோரி உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மணல் திருட்டைத் தடுக்க உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாரயணன், பி.புகழேந்தி அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக தொழில்துறை முதன்மைச் செயலா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன் விவரம்: தமிழகத்தில் மணல் கொள்ளையைத் தடுக்க கனிமவளத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினா் தொடா்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனா். மேலும் மணல் திருட்டைத் தடுக்க உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், கனிமவள உதவி இயக்குநா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்ட திருத்தம் செய்ய முடிவு: கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் மாதம் வரை சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 ஆயிரத்து 553 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 ஆயிரத்து 717 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.74 லட்சத்து 26 ஆயிரத்து 958 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் மணல் திருட்டைத் தடுக்கும் விதமாக கனிமவளச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசு வழக்குரைஞா் வாதிடுகையில், மணல் கொள்ளை தொடா்பான வழக்குகளை 4 வாரங்களில் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவு நகலைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவம்பா் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com