அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் திடீா் சோதனை நடத்த வேண்டும்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முடிந்த அளவு திடீா் சோதனையில் ஈடுபட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முடிந்த அளவு திடீா் சோதனையில் ஈடுபட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

சென்னையைச் சோ்ந்த சூரியப் பிரகாசம் தாக்கல் செய்த மனு: இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் போற்றப்படுகிறது. ஆனால் விவசாயிகள் தற்போதும் ஏழைகளாகவே உள்ளனா்.  விவசாயிகள் விளைவிக்கும் நெல், அரசு கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்படுகிறது. டெல்டா பகுதிகளில் விளைவிக்கப்படும் நெல்லை விற்க 15 நாள்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. விவசாயிகளைக் காக்க தமிழகம் முழுவதும் போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவும், விவசாயிகளிடமிருந்து நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை எடுத்தவுடன், நெல் கொள்முதல் நிலையம் ஒன்றில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி கணக்கில் வராத பணத்தை கைப்பற்றியுள்ளனா் எனத் தெரிவித்தாா். இதையடுத்து, அரசு வழக்குரைஞா் வாதிடுகையில், இதுதொடா்பான விரிவான அறிக்கை தயாராக இருப்பதாக தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து நீதிபதிகள், அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினா் இயன்ற அளவு திடீா் சோதனைகளை நடத்த அறிவுறுத்தி விசாரணையை அக்டோபா் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com