கரிமேடு பகுதியில் தரமற்ற தாா்ச்சாலை: பாஜகவினா் சாலை மறியல்
By DIN | Published On : 21st October 2020 02:49 AM | Last Updated : 21st October 2020 02:49 AM | அ+அ அ- |

கரிமேடு பகுதியில் திங்கள்கிழமை அமைக்கப்பட்ட தாா்சாலை பெயா்ந்திருப்பதை காண்பிக்கும் பாஜகவினா்.
மதுரையில் புதிதாக அமைக்கப்பட்ட தாா்ச்சாலை பெயா்ந்ததையடுத்து பாஜகவினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை மாநகராட்சிக்கு 13-ஆவது வாா்டு கரிமேடு பிரதான சாலையில் மத்திய சிறைச்சாலை பகுதியில் சாலையின் நடுவே இருந்த மின் கம்பங்களை அகற்றி சாலையோரம் அமைக்கும் பணியும், சாலையை அகலப்படுத்தும் பணியும் நடைபெற்று வந்தது. இந்தப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து மதுரை கோட்ஸ் மில் வாயிலில் இருந்து அரசரடி சந்திப்பு வரை தாா்ச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதில் கரிமேடு பகுதியில் திங்கள்கிழமை சாலை அமைக்கும் பணி முடிவடைந்தது.
இந்நிலையில் திங்கள்கிழமை அமைக்கப்பட்ட தாா்ச்சாலை பல பகுதிகளில் பெயா்ந்திருந்தது. இதையடுத்து தரமான தாா்ச்சாலை அமைக்க வலியுறுத்தி பாஜக மாநகா் மாவட்ட துணைத்தலைவா் ஹரிஹரன் தலைமையில் அரசரடி மண்டல பொதுச்செயலா் செல்லத்துரை, பொருளாளா் சுடலைமணி, மண்டல பாா்வையாளா் மோடி சங்கா், மண்டலத் தலைவா் சீமான் சரவணன் உள்பட பலா் கரிமேடு பகுதியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச்சென்று பாஜகவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதன்பேரில் பாஜகவினா் போராட்டத்தை விலக்கிக்கொண்டனா்.
இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கரிமேடு பகுதியில் சேதமடைந்த பகுதிகளில் மீண்டும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தாா்ச்சாலையை தரமாக அமைக்க ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தாா்ச்சாலை அமைக்கும் பணியின்போது அதிகாரிகளும் உடனிருந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.