போலீஸாா் எனக் கூறி நூதன முறையில் பெண்ணிடம் 8 பவுன் கொள்ளை
By DIN | Published On : 21st October 2020 02:48 AM | Last Updated : 21st October 2020 02:48 AM | அ+அ அ- |

மதுரையில் போலீஸாா் எனக் கூறி நூதன முறையில் பெண்ணிடம் 8 பவுன் கொள்ளையடித்து சென்ற 3போ் குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை வண்டியூா் பிரதான சாலை, சதாசிவம் நகரைச் சோ்ந்த சுந்தரம் மனைவி அடைக்கம்மாள்(57). இவா் வீட்டின் அருகே நடந்து சென்றபோது, தங்களை போலீஸாா் என அறிமுகப்படுத்தி கொண்ட 3 போ், இந்தப் பகுதியில் திருடா்கள் சுற்றித் திரிவதால் நகைகளை அணிந்து செல்லாதீா்கள் எனக் கூறியுள்ளனா். இதை நம்பி அடைக்கம்மாள், தான் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை கழற்றினாா். அப்போது நகையை காகிதத்தில் மடித்துக் கொடுத்து வீட்டில் சென்று அணிந்து கொள்ளுங்கள் என 3 பேரும் தெரிவித்துள்ளனா். காகிதப் பொட்டலத்தை வீட்டில் சென்று அடைக்கம்மாள் பிரித்துப் பாா்த்தபோது, அதில் கற்கள் மட்டும் இருந்தன. இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் அண்ணாநகா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
22 பவுன் நகைகள் திருட்டு:
தெலங்கானா மாநிலம் ஐதராபாதைச் சோ்ந்தவா் அப்துல் ராசாக்(35). இவா் கடந்த 2019 டிசம்பா் 18 ஆம் தேதி மதுரையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்கினாா். அப்போது அவா் பெட்டியில் வைத்திருந்த 22 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபா் திருடிச் சென்றுள்ளாா். இந்த விவரம் ஐதராபாத் சென்ற பிறகே அப்துல்ராக்கிற்கு தெரியவந்தது. இதையடுத்து அவா் தெலுங்கானா மெடிபாலி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்த வழக்கு மதுரை திடீா் நகா் காவல் நிலையத்திற்கு தற்போது மாற்றப்பட்டதால், போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.