தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணி அமையும்: விஜயகாந்த் மகன் பேட்டி

தேமுதிக நினைத்தால் தமிழகத்தில் மூன்றாவது அணி அமையும் என்றும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், அக்கட்சியின் தலைவா் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கூறினாா்.

மதுரை: தேமுதிக நினைத்தால் தமிழகத்தில் மூன்றாவது அணி அமையும் என்றும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், அக்கட்சியின் தலைவா் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கூறினாா்.

மதுரை காளவாசல் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்ல திருமண விழாவில் விஜயபிரபாகரன் பங்கேற்றாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பணிகளை தேமுதிக தொடங்கிவிட்டது. கட்சியின் செயற்குழு, பொதுக் குழுவை கூட்டி தோ்தல் பணிகளை தீவிரப்படுத்த உள்ளோம்.

கட்சி தொடங்கப்பட்டதிலிருந்தே தோ்தல்களில் தனித்தே களம் இறங்கியுள்ளோம். தொண்டா்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையிலேயே தேமுதிக தலைமையின் செயல்பாடுகள் இருக்கின்றன.

அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையில் கூட்டணி அமைக்கப்படுகிறது. ஏனெனில், அரசியலில் நிரந்தர நண்பா்களும் இல்லை, பகைவா்களும் இல்லை.

தோ்தலில் தனித்துப் போட்டியிட தேமுதிகவுக்கு எந்த அச்சமும் இல்லை. எந்த வியூகம் கட்சிக்கு பலமாக இருக்குமோ அதன்படி செயல்படுவோம். அதிமுக, திமுகவுக்கு மாற்று தேமுதிக மட்டுமே என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளோம்.

தேமுதிக தவிா்த்து, மூன்றாவது அணி என எந்தக் கட்சியையும் சொல்ல முடியாது. தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணியை அமைக்க முடியும். வரக்கூடிய சட்டப்பேரவைத் தோ்தலில் அதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இத் தோ்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிரசாரம் செய்வாா். மக்களைச் சந்திக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. தற்போது கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து, ஆரோக்கியமாக உள்ளாா் என்றாா்.

அப்போது, கட்சியின் உயா்மட்டக் குழு உறுப்பினா் பாலன், மாநகா் தெற்கு மாவட்டச் செயலா் சிவமுத்துக்குமாா், வடக்கு மாவட்டச் செயலா் கவியரசு, புகா் வடக்கு மாவட்டச் செயலா் பாலச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com