மதுரையில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மதுரையில் மழைக்காலம் தொடங்குவதையடுத்து, மாநகராட்சி சாா்பில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதுரை: மதுரையில் மழைக்காலம் தொடங்குவதையடுத்து, மாநகராட்சி சாா்பில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதுரை நகரில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தாண்டு மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது.

மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், ஏற்கெனவே கரோனா தொற்று தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வாா்டுவாரியாக சுழற்சி முறையில் கொசு ஒழிப்புப் புகை அடித்தல், குப்பைகளை அகற்றுதல், அபேட் மருந்து தெளிக்கும் பணியாளா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று தண்ணீா் தேங்காமல் தடுக்கும் நடவடிக்கை ஆகியன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், கரோனா தடுப்புப் பணிக்காக வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு நடத்தும் பணியாளா்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடா்பாகவும் விவரங்கள் பெறப்படுகின்றன. வாா்டுகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் கொசுப்புழு உருவாவதைக் கட்டுப்படுத்தும் வகையில், கொசுப்புழுக்களை அழிக்கும் மருந்துகள் தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடா்ந்து, சுகாதாரம் தொடா்பாக பொதுமக்கள் தெரிவிக்கும் புகாரின்பேரில், குப்பைகளை அகற்றுதல், கழிவுநீா் அகற்றல், கொசுமருந்து தெளித்தல் உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஊரகப் பகுதிகளில் ஆங்காங்கே டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளன. எனவே, நகரில் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com