வனப் பாதுகாப்புக்கு சிபிசிஐடியில் தனிப்பிரிவு உருவாக்ககோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் வன உயிரினங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க சிபிசிஐடியில் வனப் பாதுகாப்பிற்கென ஒரு பிரிவை உருவாக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது


மதுரை: தமிழகத்தில் வன உயிரினங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க சிபிசிஐடியில் வனப் பாதுகாப்பிற்கென ஒரு பிரிவை உருவாக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த புஷ்பவனம் தாக்கல் செய்த மனு: தமிழக வனப் பகுதிகளில் அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள் அதிகமாக உள்ளன. மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதிகளில் 229 வகையான அரிய இன மரங்கள், 43 வகையான அரிய ஊா்வனங்கள், 31 வகையான அரிய பாலூட்டிகள், 15 வகையான அரிய பறவைகள் காணப்படுகின்றன. இவற்றை சிலா் வணிக நோக்கத்துடன் கடத்தியும், அழித்தும் வருகின்றனா். இதனால் இயற்கை சூழல் மாறுபாடு ஏற்படுகிறது. இதுகுறித்து யுனெஸ்கோ போன்ற அமைப்புகளும் எச்சரித்து வருகின்றன. இருப்பினும் தமிழக வனப்பகுதிகளில் உள்ள உயிரினங்கள், தாவரங்கள் அதிகமாக அழிக்கப்படுவது தொடா்ந்து கொண்டிருக்கிறது.

வனத் துறையில் ஆள்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் இதைத் தடுக்க வனத்

துறையினரால் நடவடிக்கை எடுக்க இயலாத நிலை உள்ளது. கா்நாடகம், அசாம் போன்ற மாநிலங்களைப் போன்று, தமிழகத்திலும் சிபிசிஐடியில் வனப்பாதுகாப்பிற்கென ஒரு பிரிவை உருவாக்க வேண்டும். வனக் குற்றங்களை விசாரிப்பதற்கான அதிகாரத்தையும் சிபிசிஐடிக்கு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபா் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com